திருச்சியில் கோலம் போட்ட பெண்கள் மீது மோதுவது போல் திருட்டு காரை வேகமாக ஓட்டிச்சென்ற வாலிபர் கைது


திருச்சியில் கோலம் போட்ட பெண்கள் மீது மோதுவது போல் திருட்டு காரை வேகமாக ஓட்டிச்சென்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2020 6:39 AM IST (Updated: 23 Dec 2020 6:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் கோலம் போட்ட பெண்கள் மீது ேமாதுவது போல் காரை வேகமாக ஓட்டிச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் குறத்தெரு அருகில் உள்ள கீழ சாராய பட்டறை தெருவில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பெண்கள் தங்களது வீட்டு முன் கோலம் போட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக ஒரு கார் வந்தது. கார் வந்த வேகத்தை பார்த்து மிரண்ட பெண்கள் அலறியடித்து வீட்டிற்குள் ஓடினார்கள். இதனால் அந்த கார் வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அந்த காரை விரட்டி சென்றனர். இதனால் அந்த காரை ஓட்டி வந்த வாலிபர் சாலையோரம் காரை சாவியுடன் நிறுத்திவிட்டு கீழே குதித்து ஓடினார். ஆனால் இளைஞர்கள் சிலர் ஓட, ஓட விரட்டி சென்று அந்த வாலிபரை பிடித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருட்டு கார்

இதனை தொடர்ந்து போலீசார் அந்த காரையும் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் காரை வேகமாக ஓட்டிச்சென்ற வாலிபர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ே்கரன் குளம் என்ற பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது 19) என்பதும் செண்டை மேளம் அடிக்கும் ெதாழில் செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் ஓட்டி வந்தது திருட்டு கார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். பிடிபட்ட காருக்குள் 7 கார் சாவிகள் இருந்ததால் விஷ்ணு பிரபல கார் திருடனாக இருக்கலாம் என கருதி அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த கார் திருச்சி கிராப்பட்டி ஆரோக்கிய நகரை சேர்ந்த கார் ஒர்க்‌ஷாப் நடத்திவரும் மாணிக்கவாசகத்துக்கு சொந்தமானது என்றும், ஒர்க் ஷாப் முன் நிறுத்தி இருந்த காரை அவர் திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர்.

Next Story