சேலத்தில் பயங்கரம்: பிரபல ரவுடி படுகொலை கார்களில் வந்த கும்பல் வெறிச்செயல்


சேலத்தில் பயங்கரம்: பிரபல ரவுடி படுகொலை கார்களில் வந்த கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 23 Dec 2020 10:20 AM IST (Updated: 23 Dec 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நேற்று இரவு பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கார்களில் வந்த மர்ம கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது.

சேலம்,

சேலம் கிச்சிப்பாளையம் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை(வயது 34). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, ரே‌‌ஷன் அரிசி கடத்தல் என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்தது. செல்லதுரை நேற்று இரவு முதல் மனைவியான ஜான்சி என்பவருடைய வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து சுமார் இரவு 7.30 மணி அளவில் காரில் அம்மாபேட்டையில் உள்ள 2-வது மனைவியான சுஜி என்பவரது வீட்டுக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அவர் எருமாபாளையம் மெயின் ரோட்டில் உள்ள உயிரி எரிவாயு சமையல் அறை அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒரு கும்பல் திடீரென செல்லதுரை கார் மீது வேகமாக மோதியது. காரில் இருந்தவர்களை பார்த்ததும் தன்னை கொல்ல தான் வருவதாக நினைத்து கொண்ட அவர் காரை பின்நோக்கி ஓட்ட முயன்றார். ஆனால் பின்னால் மற்றொரு காரில் வந்த கும்பல் அவருடைய கார் மீது மோதி நிறுத்தினர்.

இதையடுத்து 2 கார்களில் இருந்து மர்ம கும்பல் கீழே இறங்கி வந்து செல்லதுரையின் முன்பக்க காரின் கண்ணாடியை அரிவாளால் வெட்டி நொறுக்கினர். இதையடுத்து செல்லதுரை காரில் இருந்து கதவை திறந்து வெளியே ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை மறித்து தலையில் சரமாரியாக வெட்டியது. இதில் செல்லதுரை சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து மர்ம கும்பல் ஒரு காரை அங்கேயே விட்டுவிட்டு மற்றொரு காரில் தப்பி சென்றுவிட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமி‌‌ஷனர் சந்திரசேகரன், உதவி கமி‌‌ஷனர்கள் மணிகண்டன், ஆனந்தராஜ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் செல்லதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ஜூலி வந்தது. பின்னர் அந்த நாய் மோப்பம் பிடித்து அங்கிருந்து கருவாட்டு பாலம் வரை ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

அரிசி கடத்தல் வழக்கு

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறும் போது, செல்லதுரையும், அவருடைய கூட்டாளியான ஜான் என்பவரும் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டது.

இந்தநிலையில் செல்லதுரையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசி கடத்தல் வழக்கில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இந்த குண்டர் சட்டத்தில் இருந்து விடுபட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு செல்லதுரை வெளியே வந்தார். அரிசி கடத்துவதாக போலீசாருக்கு காட்டிக் கொடுத்தது ஜான் என்பது செல்லதுரைக்கு தெரியவந்ததால் அவர்களிடையே மோதல் அதிகரித்தது. இந்த மோதல் காரணமாக செல்லதுரையை கூலிப்படையை ஏவி ஜான் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story