குடும்ப தகராறில், திருமணமான 8 மாதத்தில் 16 வயது சிறுமியை கொன்று வீட்டில் உடல் புதைப்பு - கொழுந்தனார்கள் கைது; கணவருக்கு வலைவீச்சு


குடும்ப தகராறில், திருமணமான 8 மாதத்தில் 16 வயது சிறுமியை கொன்று வீட்டில் உடல் புதைப்பு - கொழுந்தனார்கள் கைது; கணவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Dec 2020 3:00 AM IST (Updated: 23 Dec 2020 11:30 PM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே, குடும்ப தகராறில் திருமணமான 8 மாதத்தில் 16 வயது சிறுமியை கொன்று உடலை வீட்டில் புதைத்த கொழுந்தனார்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

துமகூரு,

துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா மிதகேஷி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட இட்டகலோட்டி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி. கூலி தொழிலாளி. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி, நரசிம்மமூர்த்திக்கும், அதே கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடந்து இருந்தது.

திருமணம் முடிந்த புதிதில் நரசிம்மமூர்த்தியும், அவரது மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக நரசிம்மமூர்த்திக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த நரசிம்மமூர்த்தி தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதுகுறித்து அவர் தனது சகோதரர்களான மஞ்சுநாத், சதீஷ் ஆகியோரிடமும் கூறி உள்ளார். இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு புதுப்பெண்ணான 16 வயது சிறுமியை, கணவர் நரசிம்மமூர்த்தி, கொழுந்தனார்கள் மஞ்சுநாத், சதீஷ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளனர். பின்னர் உடலை வீட்டில் குழிதோண்டி புதைத்து உள்ளனர்.

இதையடுத்து தனது மனைவி மாயமாகி விட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் நரசிம்மமூர்த்தி கூறி வந்து உள்ளார். ஆனால் தனது மகள் மாயமானதில் சந்தேகம் உள்ளது என்றும், நரசிம்மமூர்த்தி மற்றும் அவரது சகோதரர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், சிறுமியின் தந்தை மிதகேஷி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் மஞ்சுநாத், சதீஷ் ஆகியோரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது புதுப்பெண்ணான 16 வயது சிறுமியை கொன்று அவரது உடலை வீட்டில் குழிதோண்டி புதைத்ததை அவர்கள் 2 பேரும் ஒப்புக்கொண்டனர். இதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி அறிந்த நரசிம்மமூர்த்தி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த நிலையில் கைதான 2 பேரையும் வீட்டிற்குள் அழைத்து சென்று, சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தாசில்தார் முன்னிலையில் போலீசார் தோண்டினர். பின்னர் சிறுமியின் உடல் எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story