நகை கடை அதிபர் மகனிடம் 300 பவுன் நகை கொள்ளை வழக்கில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் கைது
நகை கடை அதிபர் மகனிடம் 300 பவுன் நகை கொள்ளை வழக்கில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
திருவள்ளூர் நகரில் தங்க நகை கடை நடத்தி வருபவர் மகேந்திர். கடந்த 11-ந்தேதி திருவள்ளூரில் இருந்து மகேந்திரின் மகன் ஆசிஸ், கடையில் வேலை செய்யும் ஊழியர் ராஜ்குமார் என்பவருடன் ஆட்டோவில் சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள சிறிய கடைகளில் நகைகளை விற்பனை செய்து விட்டு ஸ்ரீபெரும்புதூரில் நகைகளை விற்பனை செய்ய ஆட்டோவில் சென்றார்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆட்டோவை வழி மறித்து கத்தி முனையில் மிரட்டி ஆசிஸ் வைத்திருந்த 300 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தனிபடை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ஏகனாபுரத்தை சேர்ந்த கதிரவன் (வயது 25), அவரது நண்பர் தமிழரசன்(24), மகேந்திர் நகை கடையில் வேலை செய்யும் சந்தோஷ் (26), வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி ரஞ்சித் (24), மாரி ( 25), வண்டலூரை சேர்ந்த ராகுல்( 24) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்களில் கதிரவன், மானாமதி போலீஸ் நிலையத்தில் போலீசாக உள்ளார். தமிழரசன், திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக வேலை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது.
போலீஸ்காரர் தமிழரசனின் நண்பரான சந்தோஷ், ஆசிஸ் நகைகளை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விற்பனைக்கு எடுத்து செல்வதை அவரிடம் கூறி உள்ளார். பின்னர் தமிழரசனும், கதிரவனும், ரஞ்சித், மாரி, ராகுல் ஆகியோர் உதவியுடன் நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மாரி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story