வாரத்தில் 4 நாட்கள் மும்பை-டெல்லி இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் - மத்திய ரெயில்வே அறிவிப்பு


வாரத்தில் 4 நாட்கள் மும்பை-டெல்லி இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் - மத்திய ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Dec 2020 6:15 AM IST (Updated: 24 Dec 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

வாரத்தின் 4 நாட்கள் மும்பை-டெல்லி இடையே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

மும்பை,

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மத்திய ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வந்த மும்பை-டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது ராஜ்தானி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயிலாக வாரத்தில் 4 நாட்களுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து மத்திய ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வருகிற 30-ந் தேதி முதல் வாரத்தின் திங்கள், புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணி அளவில் ஹசரத் நிஜாமூதீன் ரெயில் நிலையம் சென்று சேரும்.

இதேபோல வருகிற 31-ந் தேதி முதல் மறுமார்க்கமாக ஹசரத் நிஜாமுதீன் ரெயில் நிலையத்தில் இருந்து வாரத்தின் செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.55 மணி அளவில் புறப்பட்டு மறுநாள் காலை 11.50 மணி அளவில் மும்பை சி.எஸ்.எம்.டி. வந்து சேரும்.

இந்த ரெயில்கள் கல்யாண், நாசிக் ரோடு, ஜல்காவ், போபால், ஜான்சி, ஆக்ரா கண்டோன்மன்ட், ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில் மும்பையில் இருந்து புறப்படும் ரெயிலுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முன்பதிவு தொடங்கும்.

முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் மட்டும் பயணம் செய்ய முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story