மராட்டிய மாநகராட்சி பகுதிகளில் இரவு ஊரடங்கு அமல், மும்பையில் போலீசார் தீவிர கண்காணிப்பு - அவசியம் இன்றி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல்
மராட்டிய மாநகராட்சி பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவசியம் இன்றி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மும்பை போலீசார் எச்சரித்து உள்ளனர்.
மும்பையில்,
இங்கிலாந்தில் புது வகையான வீரியம் மிக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கி உள்ளது.
உருமாறி உள்ள இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனவே மராட்டியத்தில் கடந்த 22-ந் தேதி முதல் ஜனவரி 5-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பொதுமக்கள் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அத்தியாவசியம் இல்லாத தேவைகளுக்காக வெளியே வரக்கூடாது. மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வரலாம். மேலும் 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக்கூடாது. ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த போலீசாருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து மராட்டியத்தில் மாநகராட்சி பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக மும்பையில் போலீசார் நகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுபான விடுதிகள், பார்கள், ஓட்டல்கள் இரவு 11 மணிக்கு மேல் செயல்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல வீதி, வீதியாக சென்று பொதுமக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுகொள்கின்றனர். மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் முனையம், ஹாஜி அலி உள்ளிட்ட தென் மும்பை பகுதியில் போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்தி உள்ளனர்.
இதேபோல தின்தோஷி பகுதி போலீசார் அணிவகுப்பு நடத்தியதையும் காண முடிந்தது. மேலும் கோரேகாவ், மலாடு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை வீடுகளுக்கு செல்ல அறிவுறுத்தினர்.
காந்திவிலியில் போலீசார் விதியை மீறி இரவு நேரத்தில் வெளியே வருபவர்கள் மீது 144 தடை உத்தரவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
மேலும் இதுகுறித்து மும்பை போலீஸ் செய்திதொடர்பாளரும், துணை கமிஷனருமான சைதன்யா கூறியதாவது:-
இரவு நேர ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவை இன்றி சாலைகளில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அரசின் உத்தரவை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகள் சரியான நேரத்தில் மூடப்படுவதை போலீசார் உறுதிப்படுத்தி வருகின்றனர்.
இரவு நேர ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த மண்டல துணை கமிஷனர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளும் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல கொரோனா பரவலை தடுக்க போலீசார் இரவு நேர ஊரடங்கை தானே, நவிமும்பை, புனே பகுதிகளிலும் கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story