புத்தாண்டு கொண்டாட்ட முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும் - நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி கடிதம்
புத்தாண்டு கொண்டாட்ட முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி கடிதம் எழுதியுள்ளார்.
புதுச்சேரி,
கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுவையில் விழாக்கள் கொண்டாட தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் பொறுப்பு வகிக்கும் பூர்வா கார்க் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
புதுவை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடவும் அனுமதி அளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டார். ஓட்டல்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் கவர்னர் கிரண்பெடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில் தமிழக பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவையில் புத்தாண்டை கொண்டாடினால் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இதனால் கூட்டம் காரணமாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் கொண்டாட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு, தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களை தடை செய்து வெளியிட்ட அறிவிப்பு ஆகியவற்றை குறிப்பிட்ட முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி கடிதம் ஒன்றினையும் அனுப்பி உள்ளார்.
அவர் அனுப்பிய கடிதத்தில் தமிழகத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் தமிழகத்தோடு சேர்ந்தே உள்ளன. புதுவையில் நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து எழுந்துள்ளது. எனவே பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக பொதுமக்களின் நலன்கருதி முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
Related Tags :
Next Story