கோத்தகிரி, குன்னூரில் அம்மா மினி கிளினிக் கலெக்டர் திறந்து வைத்தார்


கோத்தகிரி, குன்னூரில் அம்மா மினி கிளினிக் கலெக்டர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 24 Dec 2020 7:46 PM IST (Updated: 24 Dec 2020 7:46 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி, குன்னூரில் அம்மா மினி கிளினிக்கை கலெக்டர் திறந்து வைத்தார்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி, குன்னூர் அருகே உள்ள ஜெகதளா ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. மாவட்ட திட்ட இயக்குனர் கெட்சி லீனா அமாலினி, சுகாதார இணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத், குன்னூர் சாந்தி ராமு எம்.எல்.ஏ., நெடுகுளா ஊராட்சி தலைவர் சுகுணா சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகத்தையும் வழங்கியதுடன், அம்மா மினி கிளினிக்கில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 20 அம்மா மினி கிளினிக்குகளும், நகர பகுதிகளில் 5 கிளினிக்குகளும் 3 நடமாடும் கிளினிக்குகள் என்றும் 28 அம்மா மினி கிளினிக்குள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கிளினிக்குகளில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, சுகாதார பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும்.

சளி, காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதோடு, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கப்படும். இந்த கிளினிக் காலை 9 மணி முதல் 11 மணி, மாலை 4 மணி முதல் 7 மணி வரை செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தப்பகம்பை கிருஷ்ணன், கே.கே.மாதன், வடிவேல், சக்கத்தா சுரேஷ், புடியங்கி சிவாஜி, நஞ்சு, கெங்கரை ஊராட்சி தலைவர் முருகன், சுகாதார ஆய்வாளர் குமாரசாமி, நெடுகுளா ஊராட்சி துணை தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கீழ் கோத்தகிரி மற்றும் சோலூர் மட்டம் பகுதிகளில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Next Story