வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மாற்றத்தை கண்டித்து தி.மு.க. நடத்திய கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
அ.தி.மு.க. அரசை எதிர்த்து நடந்த தி.மு.க. கிராம சபை கூட்டத்தில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மாற்றத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாணியம்பாடி,
அ.தி.மு.க. அரசை எதிர்த்து, ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஜாப்ராபாத் ஊராட்சி பத்தாபேட்டை கிராமத்தில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்று, தங்களின் குறைகளை மனுக்களாக அவரிடம் வழங்கினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், சமீபத்தில் மதனாஞ்சேரி கிராமத்தில் நடந்த அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவின்போது ஏற்பட்ட பிரச்சினையால் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியை, திருவண்ணாமலை மாவட்டம் கடலாடிக்கு மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கொத்தகோட்டை கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் முனிவேல் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் முறையாக வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொத்தகோட்டை கிராமத்தில் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தேவராஜ் தலைமையில் தி.மு.க.வினர் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரசாரம் செய்தனர்.
Related Tags :
Next Story