வாகனங்களில் பம்பர் பொருத்தினால் அபராதம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனங்களில் தன்னிச்சையாக பம்பர் பொருத்தினால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ராமநாதபுரம்,
4 சக்கர வாகனங்களில் விபத்துகளில் வாகன சேதங்களை தவிர்ப்பதற்காக முன்பகுதியில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதுதவிர, தற்போது ஐகோர்ட்டும் தமிழகத்தில் வாகனங்களில் இதுபோன்று பம்பர் பொருத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் அரசின் வழிகாட்டுதலின்படி வாகனங்களில் பம்பர் பொருத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுவாக வாகனங்களில் விபத்தின்போது பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக பம்பர் பொருத்தப்படுகிறது.
வாகனங்கள் விற்கப்படும்போது இதுபோன்ற பம்பர்கள் பொருத்தப் படுவதில்லை. வாகன உரிமையாளர்கள் தங்களின் தேவைகளுக்காக தன்னிச்சையாக இந்த பம்பர்களை மாட்டிக்கொள்கின்றனர். இந்த பம்பர்கள் மாட்டினால் விபத்து ஏற்படும்போது முன்பக்க அதிர்வை பம்பர் வாங்கி கொண்டு அதிர்வுகளை ஏர்பேக் சென்சாருக்கு அனுப்பாமல் தடுத்துவிடுகிறது.
இதனால் பெரும் விபத்துகளில் ஏர்பேக் வேலை செய்யாமல் வாகனங்களில் செல்பவர்களுக்கு அதிக உயிர்சேதம் மற்றும் உடல் உறுப்புகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஏர்பேக்குகள் கண்இமைக்கும் நேரத்தில் வேலை செய்வதை தடுக்கும் இதுபோன்ற பம்பர்களை உடனடியாக அகற்றவும், இனி அவற்றை பொருத்தாமல் தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பம்பர்கள் பொருத்தி உள்ள வாகனங்களுக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் விதித்து வருகின்றனர். மேலும், பம்பர்களை பறிமுதல் செய்வதோடு இனி தொடர்ந்து மாட்டிவந்தால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
தொடர்ந்து மாவட்டத்தில் இந்த சோதனை நடைபெறும் என்றும் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத அனைத்து வாகனங்களிலும் பம்பர் பொருத்தி இருந்தால் உடனடியாக உரிமையாளர்கள் அகற்றிவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மட்டுமல்லாது போக்குவரத்து போலீசாரும் இந்த சோதனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் இந்த சோதனை காரணமாக வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களில் பொருத்தி உள்ள பம்பர்களை வேகமாக அகற்றி வருகின்றனர்.
தனியார் வாகனங்கள் மட்டுமல்லாது அரசு வாகனங்களிலும் இதுபோன்ற பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அதனை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story