மதுரையில் குப்பை லாரி மோதி புதுப்பெண் தலைநசுங்கி பலி தந்தையுடன் மொபட்டில் சென்ற போது பரிதாபம்
மதுரையில் மாநகராட்சி குப்பை லாரி மோதியதில், தந்தையுடன் மொபட்டில் சென்ற புதுப்பெண் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
மதுரை,
மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்தவர் பாபுலால். இவருடைய மகள் துர்காதேவி (வயது 21). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர், மதுரை கீழவெளி வீதியில் உள்ள இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். துர்காதேவிக்கு கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விரைவில் திருமணம் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர்.
மேலும் பாபுலால் வேலைக்கு செல்லும் போது மொபட்டில் தனது மகளை அழைத்துச் சென்று, அவர் வேலை பார்க்கும் கடையில் இறக்கி விட்டு செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று துர்காதேவி தந்தையுடன் மொபட்டில் வேலைக்கு சென்றார். அப்போது கீழவெளிவீதி, லட்சுமிபுரம் சந்திப்பு ரோட்டை பாபுலால் கடக்க முயன்றார். அந்த நேரத்தில் அந்த வழியாக வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி, மொபட் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது லாரியின் சக்கரத்தின் அடியில் சிக்கிய துர்காதேவி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுரை டவுன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் துர்காதேவியின் உடலை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தையின் கண் முன்னே மகள் பரிதாபமாக இறந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
மேலும் காயம் அடைந்த பாபுலாலை போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி குப்பை லாரி டிரைவர் பாண்டி (42) என்பவரை கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரி மூலம் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் போது பல டிரைவர்கள் சாலை விதிகளை கடை பிடிக்காமல் தாறுமாறாக லாரிகளை இயக்குவதாக ெதாடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இதை கண்டித்து அவனியாபுரம், வில்லாபுரம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். எனவே விபத்தை ஏற்படுத்தும் மாநகராட்சி குப்பை லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story