கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தரமறுத்தால் அவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.
ஆலந்தூர்,
ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதன் எதிரொலியாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
லண்டனில் இருந்து இதுவரை தமிழகம் வந்த 37 நபர்களை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளுக்கும் பரிசோதனை எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்கிறது.
இது புதுவகை கொரோனா அல்ல. ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றப்படவேண்டாம். அதே நேரத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்.
இங்கிலாந்து மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்து கடந்த 15 நாட்களில் தமிழகம் வந்த 38 ஆயிரம் பேரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இங்கிலாந்தில் இருந்தோ அல்லது இங்கிலாந்து வழியாகவோ இதுவரை தமிழகம் வந்துள்ள 2,724 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
விமான நிலையத்திலோ அல்லது பொது இடத்திலோ கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தால் அவர்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவின்கீழ் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story