பெங்களூருவில் ரூ.1 கோடி போதைப்பொருட்கள் சிக்கியது - நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது
பெங்களூருவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளையொட்டி விற்க பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கி உள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று தனது அலுவலகத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் உள்ள பையப்பனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சி.வி.ராமன்நகர் பாகமனேடெக் பார்க் கிருஷ்ணப்பா கார்டன் பகுதியில் உள்ள டீக்கடையின் முன்பு 2 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருப்பதாக, பையப்பனஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று டீக்கடையின் முன்பு நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்த டான்சுக்ஸ் ஒகேகே என்கிற டம்டம் என்கிற டொமினிக்(வயது 39), செலிஸ்டின் அனுக்வா(40) என்பது தெரியவந்தது. இவர்களில் டான்சுக்ஸ் ஒகேகே பெங்களூரு வடக்கு தாலுகா உனசேமாரனஹள்ளியிலும், செலிஸ்டின் அனுக்வா பிதரஹள்ளி அருகே கண்ணூரு கிராமத்திலும் வசித்தனர்.
இவர்கள் 2 பேரும் சேர்ந்து டார்க்நெட் இணையதளம் மூலம் இங்கிலாந்து லீட்சில் இருந்து போதைப்பொருட்களை பார்சல்கள் மூலம் வாங்கி அதனை பெங்களூருவில் விற்பனை செய்து வந்து உள்ளனர். மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளையொட்டி இங்கிலாந்தில் இருந்து பார்சல்கள் மூலம் போதைப்பொருட்களை வாங்கி அதை பெங்களூருவில் விற்பனை செய்யும் முயற்சியில் 2 பேரும் ஈடுபட்டு வந்து உள்ளனர்.
இவர்கள் 2 பேரும் கடந்த பல ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகிறார்கள். 2 பேரின் பாஸ்போர்ட், விசா காலமும் முடிந்து விட்டது. ஆனாலும் அவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருந்து போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 3,300 எம்.டி.எம்.ஏ. போதை மாத்திரைகள், 600 கிராம் போதை பவுடர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதுதவிர ரூ.7 லட்சம் மதிப்பிலான காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கைதான 2 பேர் மீதும் பையப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள், போதை பவுடர்கள் பெங்களூரு கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை போலீஸ் கமிஷனர் கமல்பந்த், கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு) முருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story