சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Dec 2020 7:43 PM IST (Updated: 25 Dec 2020 7:43 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஊட்டி, 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா பரவலை தடுக்க 14 மேஜைகளுக்கு பதிலாக 7 மேஜைகள் போடுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கலெக்டா் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு அறிக்கை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையம் தெரிவித்தபடி கட்டுப்பாடுகளை பின்பற்றி வாக்கு எண்ணுவதற்கு தேவையான வசதிகள் இந்த மையத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், சப்-கலெக்டர்கள் மோனிகா, ரஞ்சித்சிங் மற்றும் தாசில்தார்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து பட்டு வளர்ச்சித் துறை சார்பில், பட்டு தொழில் மேற்கொள்ள பயிற்சி பெற்ற 20 பேருக்கு பயிற்சி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி 20 பேருக்கு பயிற்சி உதவித் தொகையாக தலா ரூ. 1, 750-ம், தலா ரூ.7 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டு பயிற்சி நிலைய முதல்வர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story