வேலூர் அருகே சொத்துகளை பறித்துக்கொண்டு விரட்டியடித்த மகன்கள் மீட்டுத்தரும்படி மாவட்ட வருவாய் அலுவலரிடம் முதியவர் மனு
வீடு, சொத்தை பறித்து விட்டு மகன்கள் விரட்டியடித்து விட்டனர். அதனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபனிடம், முதியவர் ஒருவர் கண்ணீருடன் மனு அளித்தார்.
வேலூர்,
வேலூர் அருகே உள்ள விரிஞ்சிபுரம் மணிக்கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 72). இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். கலெக்டர் அலுவலக போர்டிகோ அருகே வெகுநேரமாக நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் காரில் அலுவலகத்துக்கு வந்தார். அவர் காரில் இருந்து இறங்கி அவருடைய அறைக்கு செல்ல முயன்றார். இதைக்கண்ட சம்பத் வேகமாக சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுக்க முயன்றார்.
அப்போது அவர் திடீரென தடுமாறி கீழே விழுந்தார். இதைக்கண்ட போலீசார் அவரை மீட்டனர். முதியவர் கீழே விழுந்த சத்தம் கேட்டு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் அங்கு வந்து விசாரித்தார். அப்போது சம்பத் கண்ணீர் மல்க மனு ஒன்று அளித்தார்.
அந்த மனுவில், எனக்கு 2 மகள், 5 மகன்கள். அவர்களில் ஒரு மகன் விபத்தில் உயிரிழந்து விட்டார். எனது வீடு மற்றும் சொத்தை 4 மகன்கள் பறித்துக் கொண்டனர். எனக்கு யாரும் உணவு வழங்காமல் வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டனர். தற்போது கவனிக்க யாரும் இல்லாமல் நான் மட்டும் தனியாக வசித்து வருகிறேன். வீடு, சொத்தை மீட்டுத்தரும்படி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனது வீடு, சொத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் இதுதொடர்பாக விசாரித்து விரைவில் வீடு, சொத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதையடுத்து முதியவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story