மாவட்டத்துக்கு கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து 1,456 பேர் வந்துள்ளனர் வீடுகளுக்கு சென்று கொரோனா பரிசோதனை
சேலம் மாவட்டத்துக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து 1, 456 பேர் வந்துள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு சுகாதார துறையினர் சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஓரளவு குறைந்து வருகிறது. மாவட்டத்தில் மட்டும் நேற்று முன்தினம் வரை 31 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் பரவி வரும் உருமாறிய புதிய கொரோனா வைரசை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சேலம் மாவட்டத்துக்கு வெளி நாடுகளில் இருந்து பலர் வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் இருந்து தற்போது யாராவது வருகிறார்களா? என சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் இங்கிலாந்தில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு 19 பேர் வந்துள்ளனர். இவர்களில் சேலம் மாநகரத்தை சேர்ந்தவர்கள் 10 பேர் ஆவர்.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,456 பேர் வந்துள்ளனர். இதில் சேலம் மாநகரை சேர்ந்தவர்கள் 780 பேர் ஆவர். மேலும் கடந்த 10 நாட்களில் மட்டும் இங்கிலாந்தில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு 19 பேர் வந்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடைய முகவரி மற்றும் செல்போன் எண்களை கொண்டு அவர்களை கண்டறிந்து வீடுகளுக்கே சென்று சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். பலருடைய முகவரி தவறுதலாக உள்ளதால் கண்டுபிடிக்க சிரமமாக உள்ளது. இதனால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் போலீசார் மூலம் அவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் இன்று (நேற்று) வரை 350 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 160 பேருக்கு முடிவு தெரிந்துள்ளது. இதில் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று பரிசோதனை முடிவு வந்துள்ள்ளது. இவர்களில் இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு முடிவு வந்துவிட்டது. இதில் அவர்களுக்கும் தொற்று இல்லை (நெகட்டிவ்) என வந்துள்ளது. மற்றவர்களை தேடி கண்டுபிடித்து பரிசோதனை செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story