இன்று சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடற்கரையோரங்களில் அலையாத்தி காடுகள் வளர்ப்பு தீவிரம்
உலக வரலாற்றில் கருப்பு முத்திரை பதித்து, மனிதர்களை விழுங்கிய ஆழிப்பேரலை என்னும் சுனாமி அரக்கன் அவதரித்தநாள் இன்று.
சுனாமி அரக்கன்
2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷியா அருகே பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி அரக்கன் ஊரை அழிக்க உருவெடுத்தான். சுமார் 500 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்த சுனாமி பேரலை கடற்கரையோரத்தில் இருந்த அப்பாவி மக்களை விழுங்கி தனது மிருகத்தனத்தை வெளிப்படுத்தியது.
சுனாமி அரக்கன் இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை அகோரமாக தாக்கியது. இந்தியாவில் அதிகாலை நேரத்தில் தமிழக கடற்கரையை சுனாமி பதம் பார்த்தது. தமிழ்நாட்டில் கடலூர், வேளாங்கண்ணி, தஞ்சை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்ட கடற்கரைகளை வாரி சுருட்டி சென்றது. இந்த சுனாமி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை காவு வாங்கியது மட்டுமல்லாமல், அவர்களின் உடைமைகளையும் பறித்துக் கொண்டது. பலர் தங்களது வீடுகளை இழந்து தவித்தனர்.
பருவநிலை மாற்றம்
16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தாலும், அதன் ரணங்கள் மட்டும் இன்னும் மக்கள் மனதில் ஆறாமல் உள்ளது. ஆண்டு தோறும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
சுனாமிக்கு பிறகு கடலில் ஏற்பட்ட பல்வேறு பருவநிலை மாற்றங்களால் மீனவர்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். கடலின் தன்மையை சரிவர கணிக்க முடியாத நிலை இருப்பதாக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசும், சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி கடற்கரையோரங்களில் குடியிருந்து வந்த மக்களுக்கு சுனாமி காலனி அமைக்கப்பட்டது. வனத்துறை மூலம் சுனாமியின் வேகத்தை தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது.
அலையாத்தி காடுகள்
அதேநேரத்தில் சுனாமியை தடுக்க கடற்கரையோரத்தில் இயற்கை அரண் போன்று அமைந்து உள்ள அலையாத்தி காடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. அதன்விளைவாக இன்று தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரத்தில் 400 ஏக்கர் பரப்பில் அலையாத்தி காடுகள் பரந்து விரிந்து உள்ளன. இந்த காடுகளை விரிவாக்கம் செய்யும் வகையில் ஆண்டுதோறும் புதிதாக விதைகள் விதைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கணிசமான அளவுக்கு காடுகள் அதிகரித்து உள்ளது. இந்த காடுகள் எந்த அளவுக்கு வளர்ந்து உள்ளது என்பதை அறிவதற்காக முழுமையான சர்வே பணியும் தற்போது தொடங்கி உள்ளது.
அரணாக இருக்கும் 21 தீவுகள்
இதுகுறித்து மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரகர் ரகுவரன் கூறியதாவது:-
மன்னார் வளைகுடாவில் சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தடுக்கும் தடுப்பு அரண்களாக 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளை சுற்றி ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன. இதனால் சுனாமி, புயல் போன்றவற்றின் வேகம் வெகுவாக குறைந்து விடும். இதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு. அதே நேரத்தில் கடற்கரையோரத்தில் இயற்கை அரணாக அலையாத்தி காடுகள் அமைந்து உள்ளன. பழையகாயல் முதல் புன்னக்காயல் வரையிலும், தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களிலும் அலையாத்தி காடுகள் அமைந்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சார்பில் அலையாத்தி காடுகளை வளர்க்கும் பணியும் நடந்து வருகிறது.
400 ஏக்கர்
அலையாத்தி காடுகளில் உள்ள மரங்கள் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை பூத்து, காய்க்கக்கூடியது. இந்த காலகட்டத்தில் அலையாத்தி மரங்களில் இருந்து சுமார் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் விதைகளை சேகரிக்கிறோம். அந்த விதைகளை கடற்கரையோரங்களிலும், முகத்துவாரங்களிலும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் மூலம் தூவி வருகிறோம்.
இதனால் ஆண்டு தோறும் சுமார் 1000-க்கும் அதிகமான செடிகள் வளர்ந்து வருகின்றது. தொடர்ந்து பராமரித்தும் வருகிறோம். இதனால் அலையாத்திகாடுகள் பரப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 400 ஏக்கர் வரை காடுகள் உள்ளது.
இதுகுறித்த விரிவான சர்வே எடுக்கும் பணியும் தொடங்கி உள்ளது. இது சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் அதன் வேகத்தை குறைக்க பேருதவியாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story