பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் முறைகேடுகள் இருந்தால் புகார் செய்யலாம்; திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தகவல்
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் முறைகேடுகள் ஏதேனும் இருந்தால் புகார் செய்யலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் பரிசுத் தொகுப்பு
தமிழ்நாடு மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு, துணிப்பை ஆகிய பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2500-ம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2500 அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் அனைவரும் அந்தந்த நியாய விலைக் கடைகளில் சுழற்சி முறையில் பரிசுத் தொகுப்பினை பெறும் வகையில் நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு அதாவது பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும், மதியத்தில் 100 குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட உள்ளது.
டோக்கன்கள்
நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு, டோக்கன்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை வீடுதோறும் சென்று நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நாளில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற ஜனவரி 13-ந் தேதியன்று வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வரவேண்டும். நடைமுறையில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுமின்றி நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்கள் பெறவேண்டும். முகக்கசவம் அவசியம் அணிந்து வரவேண்டும்.
புகார் செய்யலாம்
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04175-233063 அல்லது வருவாய் கோட்ட அலுவலர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் போன்று வட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story