புதுவை மக்களுக்கும் பொங்கல் பரிசு - அமைச்சர் கந்தசாமி தகவல்
புதுவை மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
பாகூர்,
புதுச்சேரி அரசு சமூக நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கிருமாம்பாக்கம் அரசு பள்ளியில் நடைபெற்றது. துணை இயக்குனர் கலாவதி வரவேற்றார். அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், சேலியமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 103 மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மாற்றுத்திறனாளிகள் வாங்கி இருந்த ரூ.15 கோடி அளவிலான கடனை தள்ளுபடி செய்துள்ளோம். கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் துறையின் அமைப்பு சாரா நலவாரியத்தின் மூலம் உதவிகள் செய்யும் திட்டம் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, கடன் ஆகியவைதான் தர முடியவில்லை. அதனை கவர்னர் தடுத்து வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள். மீண்டும் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு தான் அமையும். வேறு யாரும் வர முடியாது.
பொங்கல் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் அல்லது பணம் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலர் மற்றும் நிதி செயலரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். எதிர் அணியினர் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. நமது உரிமைகளை போராடி தான் பெற வேண்டிய நிலை உள்ளது.
வரும் தேர்தலில் என்னை தோற்கடிக்க வேண்டும் என சிலர் செயல்படுகின்றனர். அது ஒரு போதும் முடியாது. சதி திட்டத்தால் மட்டுமே என்னை தோற்கடிக்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார். நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story