திருப்பத்தூரில் தேசிய சித்த மருத்துவ பொருட்கள் கண்காட்சி; அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்


சித்த மருத்துவ கண்காட்சியை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்து பார்வையிட்டபோது
x
சித்த மருத்துவ கண்காட்சியை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்து பார்வையிட்டபோது
தினத்தந்தி 26 Dec 2020 1:33 AM IST (Updated: 26 Dec 2020 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் தேசிய சித்த மருத்துவ பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.

கண்காட்சி
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி மாவட்ட சித்த மருத்துவப்பிரிவு சார்பில் சித்த மருத்துவ மருந்து பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள், இயற்கை உணவுகள், மூலிகை செடிகள் கண்காட்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, அக்ரஹாரம் சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தில் பணியாற்றிய களப்பணியாளர்கள், மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவர்கள் என 40 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளித்தமைக்கு பாராட்டு சான்றிழ்களை வழங்கி பேசினார்.

அவர் பேசியதாவது:-

இயற்கை உணவுகள்
இயற்கை உணவுகளை மக்கள் பயன்படுத்த வேண்டும், சித்தர்களின் தந்தை என வணங்கப்படும் அகஸ்தியர் பிறந்த நட்சத்திர நாளை தேசிய சித்தா தினமாக ஆண்டு தோறும் மத்திய ஆயூஸ் கழகத்தால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அகஸ்தியரால் உருவாக்கப்பட்ட சித்த மருத்துவம் தொடர்ந்து பல்வேறு சித்தர்களால் தொன்று தொட்டு வளர்ந்து வந்துள்ளது. இயற்கை உணவுகளை மறந்து, துரித உணவுகளை மனிதர்கள் அதிகளவில் சாப்பிடுவதால் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு ஆளாகி விடுகின்றனர். இதை, தவிர்த்து இயற்கை உணவுகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

அதிகரித்து உள்ளது
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அக்ரஹாரம் சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த மையத்தின் செயல்பாடுகளால் சித்த மருத்துவத்தின் மகிமையை நாடறிய செய்தது. அனைவராலும் பாராட்டை பெற்றது.

மாநிலத்துக்கே சிறந்த எடுத்துக்காட்டாக திருப்பத்தூர் சித்த மருத்துவப் பிரிவு செயல்பட்டுள்ளது. அங்கு, பணிபுரிந்த அனைவருக்கும் பாராட்டுதலை தொிவித்துக் கொள்கிறேன். பொதுமக்கள் சித்த மருத்துவத்தை பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா, சித்த மருத்துவர் சங்கர், விக்ரம்குமார், வேலூர் புற்று மகரிஷி மருத்துவர் பாஸ்கரன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஏ.ஆர்.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் திருப்பதி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சிவாஜி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் லீலாசுப்ரமணியன், முன்னாள் சர்க்கரை ஆலை தலைவர் செல்வம் மற்றும் சித்த மருத்துவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story