திருவள்ளூர் அருகே ஏரியில் குளித்த போது தனியார் நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி சாவு - மாயமான நண்பரை தேடும் பணி தீவிரம்
திருவள்ளூர் அருகே ஏரியில் குளித்த போது, தனியார் நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பலியானார். மாயமான அவரது நண்பரை தேடும் பணி நடைபெறுகிறது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பட்டாபிராம் அருகே உள்ள தண்டுரை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 31).தனியார் நிறுவன ஊழியர். நேற்று சதீஷ்குமார் பட்டாபிராம் வள்ளலார் நகரை சேர்ந்த தனது நண்பரான சதீஷ் (31) என்பவருடன் நேமம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே ஏரியில் குளிக்கச் சென்றார்.
இதற்கிடையே, குளித்துக் கொண்டிருந்த 2 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்கள் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர். இதையடுத்து இருவரும் ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என கூக்குரலிட்டனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் நீரில் மூழ்கி போன 2 பேரையும் மீட்க முயன்றனர். இருப்பினும் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்து உடனடியாக திருவூர் தீயணைப்பு நிலையத்திற்கும், வெள்ளவேடு போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் சோபாதேவி மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் குதித்து, மூழ்கி போன 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் மாலை 6 மணி அளவில் இறந்த நிலையில் சதீஷ்குமாரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். ஆனால் சதீஷ் உடலை வெகுநேரமாகி தேடியும் கிடைக்கவில்லை. இரவு நேரம் என்பதால் தீயணைப்புத் துறையினரால் சதீஷ் உடலை மீட்க முடியாத நிலையில், இன்று மீண்டும் தீயணைப்பு வீரர்கள் உடலை தேடும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story