இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் - கலெக்டர் அறிவிப்பு


இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2020 4:24 AM IST (Updated: 26 Dec 2020 4:24 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெற உள்ளது என்று கலெக்டர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு, 

மத்திய அரசு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இளைஞர்களின் தனித்திறமையை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி மாதம் 12-ந்தேதி தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடி வருகிறது.

தேசிய இளைஞர் விழாவுக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் இந்த மாதம் 29 மற்றும் 30-ந்தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான நியமிக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்கள் மூலம் வெற்றி பெறுபவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இளைஞர் விழாவுக்கான மாவட்ட தேர்வுபோட்டிகளில் மொத்தமுள்ள 18 போட்டிகளில் தனிநபர் போட்டி பிரிவில் 11 வகையான போட்டிகளும், குழுப்போட்டியாக் 7 வகையான போட்டிகளும் பாரம்பரிய இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு ஆகிய வகையான போட்டிகளை உள்ளடக்கி நடத்தப்படவுள்ளது. வருகிற 31-ந்தேதியை அடிப்படையாக கொண்டு 15 வயது முதல் 29 வயது நிரம்பிய ஆண், பெண் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மாவட்ட அளவிலான முதல் நிலை போட்டிகளில் வெற்றிபெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். மாநில அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையும், தேசிய அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையும் நடைபெறும்.

போட்டிகளின் முடிவுகளை அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நடுவர்கள் தீர்மானிப்பார்கள்.

போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும். தங்களுடைய போட்டிக்கான பதிவினை வீடியோ ரெக்கார்டிங் நல்ல தெளிவான ஒளி/ஒலி அமைப்போடு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை உறுதிமொழி படிவத்தோடு இணைத்து செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு அலுவலரின் மின்னஞ்சல் முகவரியில் (dsokpm@gmail.com) சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story