கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
தீக்குளிக்க முயற்சி
கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வேலை நாட்களில் ஏராளமான மக்கள் வந்து மனு கொடுப்பார்கள். நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கலெக்டர் அலுவலக வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து ஆட்டோ டிரைவர், 2 குழந்தைகள், ஒரு பெண் ஆகியோர் இறங்கினர். பின்னர் அந்த ஆட்டோ டிரைவர் திடீரென்று ஒரு பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டதுடன், 2 குழந்தைகள் மற்றும் அந்த பெண் மீது ஊற்றினார்.
அப்போது குழந்தைகளின் கண்ணில் பெட்ரோல் பட்டதால் அவர்கள் கதறி அழுதனர். உடனே அந்த ஆட்டோவில் இருந்த குதித்த நாய், குழந்தைகளை சுற்றி வந்து அவர்களின் ஆடையை பிடித்து இழுத்து குரைத்தது.
இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே ஆட்டோ டிரைவர், தீப்பெட்டியை எடுத்து தீயை பற்ற வைத்து தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டதும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் நின்ற உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் விரைந்து சென்று ஆட்டோ டிரைவரை தடுத்தார்.
குழந்தைகள் அழுதனர்
மேலும் அங்கிருந்த பொதுமக்களும் வந்து ஆட்டோ டிரைவரிடம் இருந்த தீப்பெட்டியை பறித்தனர். கண்களில் பெட்ரோல் பட்டதால் குழந்தைகள் வலி தாங்க முடியாமல் கதறி அழுதனர். இதனால் குழந்தைகளின் முகத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர்.
இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தனர். இதில், சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜீவானந்தம் (வயது 48), தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் காரில் அழைத்து சென்றனர். அப்போது அவர்களுடன் நாயும் காரில் ஏறிக்கொண்டது.
போலீசாரிடம் ஜீவானந்தம் கூறியதாவது:-
பணம் கேட்டு மிரட்டல்
எனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் தீக்குளிக்க வந்தேன். எனக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே 6 சென்ட் சொந்த நிலம் உள்ளது. அதில் கடை உள்ளது. இந்த நிலையில் இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர், எனது நிலம் வழியாக நடைபாதை செல்வதாகவும், அதை மறித்து பொருட்கள் வைத்து உள்ளதாகவும் மாநகராட்சியில் புகார் அளித்தார்.
மேலும் அந்த நபர் என்னிடம் ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டி பிரச்சினை செய்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை. இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே வேறு வழியின்றி குடும்பத்துடன் தற்கொலை செய்வதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story