பொன்னம்பேட்டை அருகே பயங்கரம்: காட்டு யானை தாக்கி வன ஊழியர் பலி - மேலும் 2 பேர் படுகாயம்
பொன்னம்பேட்டை அருகே காட்டு யானை தாக்கி வன ஊழியர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
குடகு,
குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா குட்டா கிராமத்தையொட்டி நாகரஒலே வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த நிலையில் குட்டா அருகே தொட்டஹள்ளி கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதியில் நேற்று காலை வன ஊழியர்களான குருராஜ் (வயது 52), அசோக், சந்திரா ஆகிய 3 பேரும் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப்பகுதியில் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. காட்டு யானையை பார்த்ததும் வன ஊழியர்கள் 3 பேரும் காட்டு யானையை அங்கிருந்து விரட்ட முயன்றனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை அவர்களை நோக்கி வேகமாக வந்தது. இதனால் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினார்கள்.
ஆனாலும் அந்த காட்டு யானை 3 பேரையும் விடாமல் பின்தொடர்ந்து விரட்டி சென்றது. சிறிது தூரத்தில் 3 பேரையும் காட்டு யானை தாக்கியது. இதில் குருராஜ் யானையின் காலுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். இதனால் காட்டு யானை அவரை மிதித்தது. இதில் குருராஜ் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து காட்டு யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால் மற்ற 2 பேரும் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், குட்டா போலீசாரும், தொட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த மக்களும் விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த அசோக் மற்றும் சந்திராவை மீட்டு சிகிச்சைக்காக குட்டா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து யானை தாக்கி பலியான குருராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காட்டு யானை தாக்கி பலியான குருராஜிக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவர் குடும்பத்துடன் நாகரஒலே வன ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாகரஒலே வனத்துறை அதிகாரி மகேஷ்குமார் உள்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இதுகுறித்து குட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story