வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு ‘கோவிந்தா’ கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ கோஷமிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கூடலூர்,
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊட்டி பழைய அக்ரஹாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷம் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக சொர்க்கவாசலுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு பஜனை நடைபெற்றது. ஊட்டி புது அக்ரஹாரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கீழ் இயங்கும் வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வேணுகோபால சுவாமி சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். சொர்க்கவாசல் திறக்கப்பட்டு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சுவாமியை பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஊட்டி அருகே எச்.பி.எப். பெருமாள் கோவிலில் அதிகாலை 4.30 மணி, ஊட்டி வண்ணாரப்பேட்டை பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணி மற்றும் குன்னூர் வண்டிச்சோலையில் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதேபோன்று கூடலூர் சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் சன்னதியில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சுதர்சன ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அபிஷேகம் மற்றும் வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பரமபதம் எனும் சொர்க்க வாசலுக்குள் நுழையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோவில் வளாகத்தில் நின்றிருந்த பக்தர்கள் பக்தி கர கோஷமிட்டவாறு சொர்க்க வாசலுக்குள் நுழைந்து சாமியை தரிசித்தனர். மேலும் புத்தூர் வயல், பொன்னானி மகாவிஷ்ணு கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
கொரோனா பாதிப்பு காரணமாக சுவாமி வீதி ஊர்வலம் மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறந்த உடன் சிறிது தூரம் மட்டும் சுவாமி வீதிஉலா நடந்தது. ஊட்டியில் அதிகாலையில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ததை காண முடிந்தது. அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story