அந்தியூர் அருகே பெண் கொலை: ‘மதுபோதையில் அடம் பிடித்ததால் அடித்து கொன்றேன்' கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
மதுபோதையில் அடம் பிடித்ததால் அடித்து கொன்றேன் என்று அந்தியூர் அருகே நடந்த பெண் கொலையில் கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்தியூர்,
அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி அருகே உள்ள பாப்பாத்திகாட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 54). ஏற்கனவே திருமணமான இவருக்கும், பாப்பாத்திக்காட்டுப்புதூர் அருகே உள்ள முனியமூர்த்தி காலனியை சேர்ந்த மாதப்பன் மனைவி ராஜம்மாளுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. 2 பேரும் தேங்காய் பறிக்கும் வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் அந்தியூரை அடுத்த பர்கூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது விஸ்வநாதனுக்கும், ராஜம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விஸ்வநாதன் ஆத்திரம் அடைந்து மரக்கட்டையால் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த ராஜம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விஸ்வநாதனை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் விஸ்வநாதன் அந்தியூர் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.
அப்போது போலீசாரிடம் விஸ்வநாதன் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நானும், ராஜம்மாளும் கர்நாடக மாநிலம் ராமாபுரம் அருகே உள்ள பண்டலி என்ற கிராமத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தோம். அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணை அருகே மயில் பாறை வனப்பகுதியில் வந்தபோது 2 பேரும் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு ஒன்றாக மது அருந்தினோம். அப்போது மதுபோதையில் இருந்த ராஜம்மாள் என்னிடம், ‘நான் இதே இடத்தில் படுத்து கொள்கிறேன். என்னால் முடியாது’ என தெரிவித்துள்ளார். அதற்கு நான், ‘இந்த பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் உயிருக்கு ஆபத்து வா வீட்டுக்கு போகலாம்’ என தெரிவித்தேன்.
ஆனால் ராஜம்மாள் என் பேச்சை கேட்கவில்லை. நான் இங்கே தான் இருப்பேன் என்று அடம் பிடித்தார்.. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து ராஜம்மாள் மீது அடித்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே நான் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பித்து சென்றுவிட்டேன். பின்னர் ராஜம்மாளை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் அந்தியூர் வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த என்னை நேற்று போலீசார் கைது செய்தனர்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் விஸ்வநாதன் கூறினார்.
Related Tags :
Next Story