பெருமாநல்லூர் அருகே சோக சம்பவம்: கணவருடன் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - கடிதத்தில் பரபரப்பு தகவல்


பெருமாநல்லூர் அருகே சோக சம்பவம்: கணவருடன் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை - கடிதத்தில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 26 Dec 2020 6:44 PM IST (Updated: 26 Dec 2020 6:44 PM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூர் அருகே கணவருடன் 8 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடிதத்தில் உள்ள பரபரப்பு தகவல் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

பெருமாநல்லூர், 

கரூரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31). இவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே மீனாட்சி நகரில் குடியிருந்து பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த கவிதா (21) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு பெற்றோர் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். கவிதா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இதற்கிடையில் பாலமுருகனின் சகோதரர் கார்த்திகேயன் (35) என்பவரும் தனது மனைவியுடன் பெருமாநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பாலமுருகனை தொடர்பு கொள்ள செல்போனில் அழைத்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் பாலமுருகன் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த கார்த்திகேயன் நேற்று காலை பாலமுருகன் வீட்டிற்கு நேரில் சென்றார். அப்போது கதவு சாத்தப்பட்டு இருந்தது.

இதனால் கதவை கார்த்திகேயன் தள்ளினார். அப்போது கதவு திறந்து கொண்டது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பாலமுருகன் - கவிதா இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் உடனடியாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

அப்போது கணவன்- மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரின் உடல்களையும் மீ்ட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தம்பதி இருவரும் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் ஏதும் எழுதி வைத்துள்ளார்களா? என்று போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது பாலமுருகன் - கவிதா இருவரும் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்ததாகவும், அதில், “எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை. இந்த முடிவை நாங்களே எடுத்துக்கொண்டோம். அம்மா, அப்பா எங்களை மன்னித்து கொள்ளுங்கள். உண்டியல் பணத்தை அண்ணனிடம் கொடுத்து விடுங்கள் ” என எழுதியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கவிதாவின் தந்தை சண்முகம் (48) அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலமுருகன்- கவிதா ஆகியோருக்கு திருமணமாகி 2½ ஆண்டு மட்டும் ஆனதால் இது குறித்து ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெறுகிறது. 8 மாத கர்ப்பிணி தனது கணவருடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story