மீன் வியாபாரி அரிவாளால் வெட்டிக்கொலை அக்காவை கொன்றதால் பழிக்குப்பழி தீர்த்த மைத்துனர், உறவினருடன் கைது


மீன் வியாபாரி அரிவாளால் வெட்டிக்கொலை அக்காவை கொன்றதால் பழிக்குப்பழி தீர்த்த மைத்துனர், உறவினருடன் கைது
x
தினத்தந்தி 26 Dec 2020 7:10 PM IST (Updated: 26 Dec 2020 7:10 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில், மீன் வியாபாரி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தனது அக்காவை கொன்றதால் பழிக்குப்பழி தீர்க்க இந்த செயலில் ஈடுபட்ட மைத்துனரையும், அவரது உறவினரையும் போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 35). இவருக்கு கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் எழிலூர் சமத்துவபுரத்தை சேர்ந்த கருணாநிதி மகள் சத்யா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தபோது அய்யப்பன், சத்யாவிடம் காதல் வசனங்கள் பேசி அவரை தனது வலையில் வீழ்த்தி அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்திற்கு சத்யாவின் தந்தை கருணாநிதி மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சத்யாவிற்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் வழக்கம்போல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சத்யாவிடமும் அய்யப்பன் தகராறில் ஈடுபட்டு வந்ததுடன் அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சத்யா மணலியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற அய்யப்பன், சத்யாவிடம் தகராறு செய்ததோடு அரிவாளால் அவரை வெட்டிக்கொன்றார்.

இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அய்யப்பன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்தார். சிறையில் இருந்து வெளியில் வந்த அவர், மீன் வியாபாரம் செய்து வந்தார்.

தனது அக்கா சத்யாவை கொடூரமாக வெட்டிக் கொன்ற அய்யப்பனை பழிக்குப் பழி தீர்க்க வேண்டும் என சத்யாவின் தம்பி விஜய்(22) திட்டம் தீட்டினார். இந்த நிலையில் நேற்று மதியம் அய்யப்பன் அந்த பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் தனது உறவினரான 18 வயது நிரம்பிய வாலிபருடன் அங்கு வந்த விஜய், அய்யப்பனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அய்யப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர் மகாதேவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவதாஸ், சிவ குகன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் மற்றும் அவரது உறவினரான 18 வயது வாலிபர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த ெகாலை சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு வைத்து கைது செய்யப்பட்ட விஜய்யிடம் அவர் விசாரணை நடத்தினார். விசாரணையில் தனது அக்காவை கொன்றதால் அய்யப்பனை தான் வெட்டிக்கொன்றதாக கூறினார்.

பழிக்குப்பழி தீர்க்க மீன் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story