20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி 14 ஒன்றியங்களில் 30-ந்தேதி மனு கொடுக்கும் போராட்டம் தஞ்சை மாவட்ட வன்னியர் சங்க கூட்டத்தில் முடிவு
20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தஞ்சை மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது என தஞ்சை மாவட்ட வன்னியர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தனவந்துராஜன், அரசூர் ஆறுமுகம், முன்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட பா.ம.க. செயலாளர் சரவணன் வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சங்கர், உழவர் பேரியக்க மாநிலதுணைத்தலைவர் ஜோதிராஜ், துணை செயலாளர் கலியமூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதிவிமல், மாவட்ட தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் ராம்குமார், தமிழ்செல்வன், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் ஆகியோரின் பிறந்த நாள் விழா மற்றும் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு போராட்டத்திற்கான ஆலோசனை கூட்ட தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழாவை அடுத்தமாதம் (ஜனவரி) 3-ந்தேதி தஞ்சையில் நடத்துவது.
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு ஏற்கனவே 2 கட்ட போராட்டம் நடத்திய நிலையில் 3-வது கட்டமாக வருகிற 30-ந்தேதி (புதன்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது. இதில் திரளாக பங்கேற்பது.
தஞ்சை ஒன்றியம் மாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமமான ஒத்தைவீடு கிராமத்திற்கு செல்லும் பாதை பழுதடைந்து உள்ளது. இந்த பகுதி மக்கள் மாத்தூருக்கு செல்ல வேண்டுமானால் குடமுருட்டி ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும் காலங்களில் 7 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே மாத்தூர்- ஒத்தைவீடு கிராமம் இடையே குடமுருட்டி ஆற்றில் பாலம் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் நாகப்பன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story