மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 26 Dec 2020 4:29 PM GMT (Updated: 26 Dec 2020 4:29 PM GMT)

மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆவுடையார்கோவில், 

ஆவுடையார்கோவில் அருகே உள்ள பரமந்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ஆனால் கொரோனா பரவலை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வரவில்லை. பக்தர்கள் மட்டுமே அந்த வழியாக சமூக இடைவெளியுடன் வந்து தரிசனம் செய்து சென்றனர்.

இதேபோல் ஆவுடையார்கோவில் வடநகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சிவயோக நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புநிகழ்ச்சி நேற்று அதிகாலையில் நடைபெற்றது. நாராயண பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற பெருமாளை வழிபட்டனர்.

திருமயத்தில் குடவரை கோவிலான சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து ராஜா அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. அலங்கரிக்கப்பட்ட சத்தியமூர்த்தி பெருமாள் மேளதாளங்கள் முழங்க பல்லக்கில் சொர்க்கவாசல் கதவு முன் வந்தார். அதனைத் தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் சத்தியமூர்த்தி பெருமாள் எதிரே ஆழ்வார் மோட்சம் கொடுத்தார். பின்னர் சொர்க்க வாசல் கதவு திறக்கப்பட்டு சாமி நுழைந்து புஷ்ப ஊரணி வழியாக பல்லக்கில் தூக்கி ஊர்வலமாக சென்று சிங்கார கொட்டகையில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

மணமேல்குடி பொன்னகரம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சின்ன திருப்பதி என்று அழைக்கப்படும் ஆலயம் என்பதால் ஏராளமான பக்தர்கள் சமுக இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்தனர்.

குளத்தூர், மலையடிப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சொர்க்கவாசல் வழியாக செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்ைல. தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

விராலிமலை அருகே உள்ள விராலூரில் பிரசித்தி பெற்ற சீனிவாச பொருமாள் கோவில் உள்ளது. இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுவாமி புறப்பாடு இன்றி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்வச சுவாமிகளுக்கு மட்டும் 16 வகையான அபிஷேகம் செய்து தீபாராதனைகள் நடந்தன. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி . ஆலங்குடி அருகே உள்ள காட்டுப்பட்டி ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு மஞ்சள், பால், திரவியம், இளநீர், தயிர் போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதேபோல். ஆலங்காட்டில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆலங்குடி அருகில் உள்ள 'சிவசக்தி விநாயகருக்கு பால், பன்னீர், சந்தனம், திரவியம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

பொன்னமராவதியில் உள்ள பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story