வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு - பக்தர்கள் கூட்டமின்றி அமைதியாக நடந்தது
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனாவிற்காக பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளால் பக்தர்கள் கூட்டம் இன்றி விழா அமைதியாக நடந்தது.
திருச்சி,
பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படுவதும், பன்னிரு ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பானதாகும்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி ெபருவிழா கடந்த 14-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. மறு நாளான 15-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவத்தையொட்டி உற்சவர் நம்ெபருமாள் தினமும் காலை வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு ேசவை சாதித்து வந்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் காரணமாகவும் நம்பெருமாள் புறப்பாடு நேரங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளிய பின்னர் தான் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று முன்தினம் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடான போதும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் மாலை 6 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
வழக்கமாக மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசித்தால் இந்த உலக மாயையில் இருந்து விடுபட்டு மனம் அமைதி அடையலாம் என்ற நம்பிக்கை காரணமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளினால் மோகினி அலங்கார தரிசன நிகழ்ச்சியிலும் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே நம்பெருமாளை தரிசிக்க முடிந்தது.
இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் நேற்று அதிகாலை திறக்கப்பட்டது. சொர்க்கவாசலில் எழுந்தருள்வதற்காக நம்பெருமாள் அதிகாலை 3.25 மணிக்கு துலா லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பல்லாயிரம் கோடி மதிப்பிலான ரத்தின அங்கி, பாண்டியன் கொண்ைட, கிளிமாலை அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து வெளியே வந்த நம்பெருமாளை பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் வணங்கினார்கள்.
மேலப்படி வாசல், ராஜமகேந்திரன் சுற்று, நாழி கேட்டான்வாசல், கொடிக்கம்பம் வழியாக பிரகாரத்தை சுற்றிய நம்பெருமாள் விரஜா நதி மண்டபத்தை அடைந்ததும் அங்கு பட்டர்கள் வேத விண்ணப்பம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
இதனை தொடர்ந்து சரியாக 4.45 மணிக்கு சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. சொர்க்கவாசலில் எழுந்தருளிய நம்பெருமாள் சந்திர புஷ்கரணி, பூப்்பந்தல் நடைபாதை வழியாக நம்பெருமாள் மணல் வெளி மண்டபத்தை அடைந்தார். மணல் வெளியில் திரண்டு நிற்கும் பக்தர்களை தேடிவந்து நம்பெருமாள் சுற்றிச்சுற்றி சேவை சாதிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அரசு அறிவித்த விதிமுறைகள் காரணமாக அங்கு பக்தர்கள் நிற்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. மணல்பரப்பில் பன்னிரு ஆழ்வார்களுக்கு நம்பெருமாள் மரியாதை செய்துவிட்டு திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 7 மணிக்குமேல் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்த பக்தர்கள் இரவு 8 மணி வரை தரிசனம் செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டு இருந்த விதிமுறைகள் காரணமாக பக்தர்கள் கூட்டம் இன்றி அமைதியான முறையில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட மக்கள் பிரதிநிதிகள் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், நீதிபதிகள் என முக்கிய பிரமுகர்கள் யாரும் வரவில்லை. உள்ளூர் பக்தர்களும் கோவிலுக்குள் வந்து விடாதபடி அனைத்து வாசல்களும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. கோவில் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், பத்திரிகையாளர்கள் மட்டுமே நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றனர். இதனால் வழக்கமான நெருக்கடி, தள்ளுமுள்ளு எதுவும் ஏற்படவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுமுகம் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிகாலை 2 மணி அளவில் வந்தார். எம்.எல்.ஏ. போன்ற முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை என ஏற்கனவே அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்ததால் போலீசார் அவரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் சொர்க்கவாசல் திறப்பு முடிவடைந்து நம்பெருமாள் மணல் வெளியில் எழுந்தருளியபோது சாமி தரிசனம் செய்தார்.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் அறிவுரைப்படி இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story