இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்கப்படும்; கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


பொலவபாளையம் ஊராட்சியில் பயனாளிகளுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விலையில்லா ஆடுகளை வழங்கியபோது
x
பொலவபாளையம் ஊராட்சியில் பயனாளிகளுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் விலையில்லா ஆடுகளை வழங்கியபோது
தினத்தந்தி 27 Dec 2020 1:00 AM IST (Updated: 26 Dec 2020 11:09 PM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

வளர்ச்சி திட்ட பணிகள்
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட நம்பியூா், பொலவபாளையம், கரட்டுப்பாளையம் ஊராட்சியில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் விலையில்லா வெள்ளாடு-செம்மறி ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொலவபாளையம் ஊராட்சியை சேர்ந்த 120 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டன.

பூஜ்யம் கல்வி ஆண்டாக...
பின்னர் நம்பியூர் அருகே உள்ள சாவக்கட்டுபாளையம் பகுதியில் மினி கிளினிக் திட்டத்தையும், மருத்துவ முகாமையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ருக்குமணி, மணிகண்டமூர்த்தி, பழனிச்சாமி, பேரூராட்சி செயலாளர்கள் கருப்பணன், சேரன் சரவணன், ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக் தொடங்கப்பட உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 32 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் சுகாதாரம் மற்றும் மதநல்லிணக்கத்தை பேணிக்காப்பவராக உள்ளார். இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும்.

விளையாட்டு மைதானம்
அடுத்த ஆண்டு அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்க உள்ள மாணவர்களுக்கு மருத்துவப்படிப்புக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அம்மா ஊரக விளையாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்துள்ளது.

மீதமுள்ள பணிகள் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகள் மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். பயோ மெட்ரிக் கருவியில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு, ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசான ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்படும்.

மடிக்கணினி வழங்கும் திட்டம்
தமிழகத்தில் தொடர்ந்து மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதுவரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 52 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. தலைமையாசியர்களுக்கு மடிக்கணினிக்கு பதிலாக ஸ்மார்ட்போன் வழங்கினால் தற்போதுள்ள பாடத்திட்டத்தை முழுமையாக அவர்களால் பின்பற்ற முடியாது. செல்போன், டேப் தரம் குறைவானதாக இருப்பதால் அதை மாணவர்களுக்கு வழங்குவதில்லை.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சிகளில் நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், தெற்கு ஈஸ்வரமூர்த்தி, மாநில வர்த்தக அணி செயலாளர் ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய குழு தலைவர் சுப்பிரமணியம், நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பாவேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story