சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடலில் மலர் தூவி மீனவர்கள் அஞ்சலி
சுனாமி நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி கடலில் மலர் தூவி மீனவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
சுனாமி
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி உருவானது. இந்த சுனாமியால் பசிபிக் பெருங்கடலில் ஆழிப்பேரலை உருவாகி, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் தமிழகத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலத்த பொருட்சேதமும் ஏற்பட்டது. பலர் தங்களது உடைமைகளை இழந்தனர்.
இந்த சுனாமி தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேரும், சுற்றுலா சென்ற இடத்தில் தூத்துக்குடியை சேர்ந்த 9 பேரும், நெல்லை மாவட்டத்தில் 5 பேரும், சுற்றுலா சென்ற இடத்தில் நெல்லையை சேர்ந்த 12 பேரும் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 615 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி தாலுகாவில் 634 வீடுகளும், சாத்தான்குளத்தில் 5 வீடுகளும், திருச்செந்தூரில் 83 வீடுகளும், விளாத்திகுளத்தில் 13 வீடுகளும் சேதம் அடைந்தன. மேலும் மாவட்டத்தில் 638 கட்டுமரங்கள் நாசம் ஆயின.
மலர் தூவி அஞ்சலி
சுனாமி பேரழிவு ஏற்பட்டு 16-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை மாதா மீனவர் நலச்சங்கம் சார்பில், சுனாமியில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், கடலில் மலர் தூவியும், பால் ஊற்றியும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் குருஸ்புரம் பங்குதந்தைகள் உபார்ட்டாஸ், ஜாயினஸ், சங்க தலைவர் ஆல்ட்ரின், செயலாளர் எவ்வுளின், பொருளாளர் ராஜ், தூத்துக்குடி மாவட்ட அண்ணா சங்குகுளி தொழிலாளர் சங்க தலைவர் இசக்கிமுத்து மற்றும் மீனவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் சுனாமி நினைவு தினத்தையொட்டி நேற்று தூத்துக்குடியில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை புனித ராயப்பர் சின்னப்பர் தேவாலயத்தில், சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு திருப்பலி நடந்தது. ஆலந்தலை பங்குதந்தை ஜெயக்குமார், அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் இந்த திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தில் இருந்து பங்குதந்தை, ஊர் தலைவர் மகிபன், ஊர் மக்கள் உள்ளிட்டோர் கடற்கரைக்கு மவுன ஊர்வலமாக சென்றனர். அங்கு கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் கடற்கரையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ் குட்டி, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் இளையராஜா, உடன்குடி ஒன்றிய பொருளாளர் ஜான் வளவன், திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர் செஞ்சுடர், நகர துணை செயலாளர் தாமரை, ஜெ.ஜெ.நகர் முகாம் செயலாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story