கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் உத்தரவை கண்டித்து திருநள்ளாறில் கடைகள் அடைப்பு; வியாபாரிகள், பக்தர்கள் மறியல்; போக்குவரத்து பாதிப்பு- பரபரப்பு
திருநள்ளாறுக்கு பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என்ற உத்தரவை கண்டித்து, கடைகளை அடைத்து வியபாரிகளும், பக்தர்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோர்ட்டில் வழக்கு
உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து பிப்ரவரி 12-ந்தேதி வரை இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருவதால் சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என கோவில் பரம்பரை ஸ்தானிகர்கள் சங்க தலைவர் நாதன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கொரோனா விதிமுறை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி சனிப்பெயர்ச்சி விழா நடத்த தடை இல்லை. கவர்னர், மாவட்ட கலெக்டர், கோவில் அறங்காவலர் குழு இணைந்து பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து சனிபகவானை தரிசிக்க 48 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வருவோரை மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். சான்றிதழ் இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.
முன்பதிவு செய்த பக்தர்கள்
இதற்கிடையே சனிபகவானை தரிசிக்க முன்பதிவு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால் சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க ஆன்லைனில் 15 ஆயிரம் பேர் ரூ.300, ரூ.600, ரூ.1000 என கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தனர்.
நேற்று காலை அவர்கள் சனி பகவான் கோவிலுக்கு வந்தனர். கொரோனா சான்றிதழ் இல்லாததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய சென்றவர்களுக்கு அங்கும் பரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்பினர். இதனால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கடைகள் அடைப்பு-மறியல்
இந்தநிலையில் முன்பதிவு செய்த கட்டணத்தை திரும்பத் தருமாறு பக்தர்கள் கேட்டனர். ஆனால் அதற்கு கோவில் நிர்வாகம் தரப்பில் இருந்து சரிவர பதில் தரப்படவில்லை.
கவர்னரின் உத்தரவால் பக்தர்கள் பாதிக்கப்பட்டதை கண்டித்து திருநள்ளாறு வர்த்தக சங்கம், அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டன. திருநள்ளாறு தேரடி அருகே வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இ்தில், முன்னாள் அமைச்சர்கள் நாஜிம், சிவா, பா.ம.க. செயலாளர் தேவமணி, கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மன் சிங்காரவேலு, காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச்சிறுத்தை, கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பக்தர்களும் மறியல்
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொரோனா சான்றிதழ் அவசியம் என்பதை ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் என்பதில் உறுதியாக இருந்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ரெயில், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அவர்களிடம் போலீசார், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க முடியும் என்று தெரிவித்தனர்.
கோபமடைந்த பக்தர்கள் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏமாற்றம்
சனிப்பெயர்ச்சிக்கு முதல் சனி மற்றும் முதல் நாள் லட்சக்கணக்கான பக்தர்கள், திருநள்ளாறில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொற்று, ஆன்லைன் முன்பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் போன்ற கட்டுப்பாடுகளால், நேற்றைய தினம் சுமார் 18 ஆயிரம் பேர் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர்.
முன்பதிவுடன் அவர்கள் வந்தாலும், கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வந்த சுமார் 200 பேர் மட்டுமே பிற்பகல் 2 மணி வரை சனீஸ்வரனை தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் கொரோனா சான்றிதழ் பெறாததால், தரிசனம் செய்ய முடியாமல் கோவில் கோபுரத்தை பார்த்து வணங்கிவிட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.
Related Tags :
Next Story