கடற்கரையில் சுனாமி நினைவு தின அஞ்சலி; உயிரிழந்தவர்களுக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி மரியாதை
புதுவை கடற்கரையில் சுனாமி நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களுக்கு கடலில் பால் ஊற்றி முதல்-அமைச்சர் நாராயணசாமி மரியாதை செலுத்தினார்.
சுனாமி பேரழிவு
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவின்போது புதுவை மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சுனாமி தினத்தன்று கடற்கரையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று காலையில் புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி அங்கு சுனாமியின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் பால் ஊற்றினார்.
அவருடன் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன், மீன்வளத்துறை செயலாளர் பூர்வா கார்க், இயக்குனர் முத்துமீனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பா.ஜ.க.
கடற்கரையில் பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் துணைத்தலைவர் செல்வம், பொதுச்செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், செயலாளர்கள் அகிலன், ரத்தினவேல், நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், மீனவர் அணித்தலைவர் பழனி உள்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
மவுன ஊர்வலம்
வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம மக்கள் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர். முத்தியால்பேட்டை சோலைநகர் கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்பொதுமக்கள் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
பெரிய காலாப்பட்டில் உள்ள சுனாமி நினைவு தூணுக்கு முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினார்.
புதுவை மாநில தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் மலை தருமலிங்கம் தலைமையில் மீனவ பெண்கள் மவுன ஊர்வலமாக வந்து கடற்கரை காந்திசிலை அருகே அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் கடலில் பாலும் ஊற்றினர். நிகழ்ச்சியில் மீனவர் அமைப்புகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மீன்பிடிக்க செல்லவில்லை
புதுவையில் உள்ள 18 மீனவ கிராமங்களிலும் நேற்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையிலேயே ஓய்வெடுத்தன.
இதன்காரணமாக மீன் மார்க்கெட்டுகளும் இய ங்கவில் லை. அதுமட்டுமின்றி வீடு வீடாக சென் று மீன் விற்கும் பெ ண் களு ம் மீன் விற்பனை க்கு செல்லவில் லை.
Related Tags :
Next Story