முதல்-அமைச்சர் வேட்பாளரை பா.ஜனதா தான் அறிவிக்குமா? அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்
கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளரை பா.ஜனதா தான் அறிவிக்குமா? என்பதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.
நிலத்தடி நீர்மட்டம்
மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் மற்றும் கீரைத்துறையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இது ஒரு சிறப்பான திட்டம். இந்த திட்டம் போன்று தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறப்பான செயல்பாடுகளை அடுக்கி கொண்டே போகலாம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு நலத்திட்டங்கள், நீர்நிலைகளை மேம்படுத்துதல், தடுப்பணைகள் கட்டுதல், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு அதிக முறை வந்து உள்ள முதல்-அமைச்சரால் ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் முத்தாய்ப்பு திட்டமாக முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் ரூ.1,295 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
மாடக்குளம் கண்மாயில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி வைப்பதற்கு கொடிமங்கலத்தில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை வருகின்ற 3 மாதத்தில் கட்டி முடிக்கப்படும். இதனால் துவரின்மான், மாடக்குளம், கொடிமங்கலம் ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும். இந்த கண்மாய் நிரம்புவதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
அதிக பரிசுகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் நாளை (இன்று) முதல் தனது பிரசாரத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து துறையிலும் இந்திய அளவில் தமிழகம் அதிக பரிசுகளை பெற்று இருக்கிறது. குறிப்பாக தமிழக கூட்டுறவுத்துறை மட்டும் அகில இந்திய அளவில் 29 பரிசுகளும், 2 முறை ஜனாதிபதி விருதும் பெற்றுள்ளது. அதே போல் ஒவ்வொரு துறையும் சாதனை படைத்துள்ளது.
தங்கம் கிடைக்கும் நாட்டில் கூட தங்கத்தை விலையில்லாமல் மக்களுக்கு தரமாட்டார்கள். ஆனால் தமிழகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளன. வழக்கமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சட்டமன்றத்திலும் எதிரொலிக்கும் என்ற ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. 1980-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. 2 இடங்களை மட்டுமே பிடித்தது. ஆனால், சட்டமன்றத்தில் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.
மு.க.அழகிரி
முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பா.ஜனதா தலைமை தான் அறிவிக்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறி வருவது, அவரது கட்சியின் கொள்கை. பாரதீய ஜனதா கட்சி என்பது அகில இந்திய கட்சி. எனவே அதன் முடிவுகளை தேசிய தலைமை தான் அறிவிக்கும். மாநில தலைமை அறிவிக்க முடியாது. எனவே தான் முதல்-அமைச்சர் வேட்பாளரை அந்த கட்சியின் மத்திய தலைமை அறிவிக்கும் என்று முருகனும், மற்றவர்களும் கூறுகின்றனர். ஏற்கனவே பா.ஜனதா மாநில தலைவர் முருகன், அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று கூறியுள்ளார்.
மு.க.அழகிரி செயல்பாடு பற்றி மதுரை மக்களுக்கு நன்கு தெரியும். அழகிரி தான் எடுக்கும் கொள்கையிலிருந்து மாறாத நிலைப்பாடு உடையவர். முறையாக திட்டங்களை வகுத்து செயல்படுபவர். கலைஞர் கருணாநிதியிடம் உள்ள அனைத்து திறமைகளும் அழகிரியிடம் உள்ளது. ஆனால், தி.மு.க. அழகிரியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மு.க.அழகிரி எதிர்க்கட்சிகளை வளரவிடக்கூடாது என்பதில் கருணாநிதியை போன்று செயல்படுபவர். அழகிரி கட்சி தொடங்கினால் தி.மு.க.விற்கு தான் பாதிப்பு. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
Related Tags :
Next Story