பயோமெட்ரிக் எந்திரத்தில் குளறுபடி: ரேஷன் கடை ஊழியர்கள் தாலுகா அலுவலகத்தில் போராட்டம்


பயோமெட்ரிக் எந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் ஈடுபட்டபோது எடுத்தபடம்
x
பயோமெட்ரிக் எந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் ஈடுபட்டபோது எடுத்தபடம்
தினத்தந்தி 27 Dec 2020 3:38 AM IST (Updated: 27 Dec 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

பயோமெட்ரிக் எந்திரத்தில் கைரேகை வைப்பதில் குளறுபடியை கண்டித்து அதை ஒப்படைக்கும் போராட்டத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

போராட்டம்
உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் பயோமெட்ரிக் எந்திரத்தின் மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை கைரேகையை வைத்து வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், எந்திரம் சரியாக இயங்காததால் நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 பயனாளிகளுக்கு கூட ரேஷன் பொருட்களை வழங்க இயலவில்லை என்று கூறி அந்த எந்திரங்களை உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள 164 ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்க மதுரை புறநகர் மாவட்ட தலைவர் பவர்சிங், துணைத்தலைவர் ராஜபாண்டி, உசிலம்பட்டி ஒன்றிய தலைவர் சொக்கர், மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், நகர் துணைத் தலைவர் இளையராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த போராட்டத்தில் ஏராளமான நியாய விலை கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் எந்திரம் சரிவர இயங்காததால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை குறித்த நேரத்தில் வழங்க இயலவில்லை. இதனால் எங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உள்ளது.

பேச்சுவார்த்தை
எனவே இந்த எந்திரத்தை முறையாக செயல்பட செய்தால் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை குறித்த நேரத்தில் வழங்க இயலும். தற்போது பொங்கல் பண்டிகை வருவதால் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகை ஆகியவைகளை விரைவில் வழங்கும் வகையில் இந்த எந்திரத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்தால் பணியை காலதாமதமின்றி செய்ய ஏதுவாக இருக்கும் என்று வலியுறுத்தினர்.

இதைதொடர்ந்து எந்திரங்களை உசிலம்பட்டி தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி ஆகியோரிடம் ஒப்படைக்க சென்றனர். இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் விஜயலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இந்த எந்திரங்களை முறையாக இயங்கச் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்து விரைவில் நல்ல தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக எந்திரங்கள் ஒப்படைக்கும் போராட்டத்தை நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் கைவிட்டனர்.

திருமங்கலம்
திருமங்கலம் பகுதிகளில் 91 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பயோமெட்ரிக் எந்திரங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயோமெட்ரிக் எந்திரங்கள் பெரும்பாலான கடைகளில் பழுதடைந்துள்ளன. இதனால் உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது. எனவே ரேஷன் கடை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனால் ரேஷன் கடைகளுக்கு நவீன எந்திரங்கள் வழங்க வேண்டும் என கூறி பழுதான எந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழுதான எந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள எந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கார்டுதாரர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பொங்கல் வர உள்ள நிலையில் பரிசு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்ற அதிருப்தியில் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

Next Story