கார் மோதிய வேகத்தில் சாலையில் ‘பல்டி’ அடித்து ஆட்டோ கவிழ்ந்தது; டிரைவர் பலி - மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் படுகாயம்


கார் மோதிய வேகத்தில் சாலையில் ‘பல்டி’ அடித்து ஆட்டோ கவிழ்ந்தது; டிரைவர் பலி - மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Dec 2020 5:44 AM IST (Updated: 27 Dec 2020 5:44 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் அதன் டிரைவர் பலியானார். மோதிய வேகத்தில் சாலையில் ஆட்டோ ‘பல்டி’ அடுத்து உருண்டபோது பின்னால் வந்த மோட்டார்சைக்கிளில் மோதியதில் அதில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை,

திருவள்ளூரை அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 42). ஆட்டோ டிரைவரான இவர், பேரம்பாக்கத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அரக்கோணம் நெடுஞ்சாலையில் இருளஞ்சேரி கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே பூந்தமல்லி நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியது.

இதில் சாலையில் ‘பல்டி’ அடித்து உருண்ட ஆட்டோ, பின்னர் தலைகுப்புற கவிழ்ந்தது. ‘பல்டி’ அடுத்து உருண்டபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியது.

இதில் ஆட்டோ டிரைவர் சங்கரன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த நாகப்பன், வெற்றிவேல் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 3 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சங்கரன் பரிதாபமாக இறந்தார். நாகப்பன், வெற்றிவேல் இருவரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story