திருப்பத்தூரில் மரங்களை வேருடன் அகற்றி வேறு இடத்தில் நடும் நிகழ்ச்சி; அமைச்சர் பங்கேற்பு


வனத்துறை அலுவலகத்தில் வேருடன் பிடுங்கி திருப்பத்தூர் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் மரத்தினை நடும் நிகழ்ச்சி
x
வனத்துறை அலுவலகத்தில் வேருடன் பிடுங்கி திருப்பத்தூர் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் மரத்தினை நடும் நிகழ்ச்சி
தினத்தந்தி 27 Dec 2020 5:57 AM IST (Updated: 27 Dec 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் வனத்துறை அலுவலக வளாகத்தில் வளர்ந்திருந்த மரங்களை பிடுங்கி தோட்டக்கலைத்துறை அலுவலக வளாகத்தில் நடும் நிகழ்ச்சி நடந்தது. அதில் அமைச்சர், கலெக்டர் பங்கேற்றனர்.

மரம் நடும் நிகழ்ச்சி
திருப்பத்தூரில் லண்டன் மிஷன்ரோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த இடத்தில் உள்ள பல நூறு ஆண்டுகளாக வளர்ந்திருந்த 137 மரங்களை வெட்டாமல், வேருடன் பிடுங்கி திருப்பத்தூரில் உள்ள பொதுப்பணித்துறை பயணிகள் விடுதி, தோட்டக்கலைத்துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் நடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருப்பத்தூரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வளர்ந்திருந்த மரங்களை வேருடன் பிடுங்கி வந்து தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நடும் நிகழ்ச்சி நடந்தது.

தாய் மண்ணை வணங்கினர்
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று வனத்துறை அலுவலகத்தில் இருந்து வேருடன் பிடுங்கி வந்த வெப்பாலம் ரகத்தைச் சார்ந்த மரத்தை நட்டார். அந்த மரத்துக்கு ‘பத்மாசினி’ எனப்பெயர் சூட்டி, அந்த மரத்துடன் பேசுகையில், ‘நன்றாக வளர்ந்து, என் பெயரை காப்பாற்று’ என்றார்.

மரம் பிடுங்கப்பட்ட இடத்தில் இருந்து எடுத்து வந்த தாய்மண்ணை மாவட்ட கலெக்டர் சிவன்அருள், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக சங்க தலைவர் டி.டி. குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம், கூட்டுறவு சங்க தலைவர் கே.எம்.சுப்ரமணியம், மரங்களுக்கு மறுவாழ்வு தரும் ஓசை அமைப்பின் தலைவர் சையத், சமூக ஆர்வலர் அசோகன் ஆகியோர் மரம் நடப்பட்ட குழியில் கொட்டி வணங்கினர்.

மக்கள் மகிழ்ச்சி
இயற்கை சூழல் மாறாமல் இருக்க மரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது, என்பதை மாவட்ட நிர்வாகம் உணர்ந்து செய்த செயல் அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படு்த்தியது.

Next Story