பெங்களூருவில், பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தனின் சிலை உடைப்பு - ஆதரவாளர்கள் போராட்டம்-பரபரப்பு


பெங்களூருவில், பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தனின் சிலை உடைப்பு - ஆதரவாளர்கள் போராட்டம்-பரபரப்பு
x
தினத்தந்தி 27 Dec 2020 6:16 AM IST (Updated: 27 Dec 2020 6:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மறைந்த பிரபல கன்னட நடிகர் விஷ்ணுவர்தனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. இதனை கண்டித்து ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு உண்டானது.

பெங்களூரு,

இந்திய சினிமாவின் பீனிக்ஸ் பறவை என்று வர்ணிக்கப்பட்டவர் விஷ்ணுவர்தன். கர்நாடகத்தை சேர்ந்த இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். விஷ்ணுவர்தனுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதுமே உண்டு. கடந்த 2009-ம் ஆண்டு தன்னுடைய 59-வது வயதில் விஷ்ணுவர்தன் மரணம் அடைந்து இருந்தார்.

இந்த நிலையில் பெங்களூருவில் விஷ்ணுவர்தன் சிலையை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு பெங்களூரு மாகடி ரோடு டோல்கேட்டில் இருந்து பைப்லைன் செல்லும் சாலையில் விஷ்ணுவர்தனுக்கு சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை கர்நாடக வீட்டு வசதித்துறை மந்திரி வி.சோமண்ணா திறந்து வைத்து இருந்தார்.

விஷ்ணுவர்தன் பிறந்தநாள், நினைவு நாள் வரும் போது அந்த சிலைக்கு அவரது ஆதரவாளர்கள் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு விஷ்ணுவர்தனின் சிலையின் அருகே சென்ற மர்மநபர்கள், விஷ்ணுவர்தனின் சிலையை உடைத்தனர்.

இதனால் சிலை 2 துண்டாக உடைந்து விழுந்தது. பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற விஷ்ணுவர்தனின் ஆதரவாளர் ஒருவர், விஷ்ணுவர்தன் சிலை உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து அவர் சக ஆதரவாளர்களுக்கும் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து உடைக்கப்பட்டு கிடந்த விஷ்ணுவர்தன் சிலை முன்பு அவரது ஆதரவாளர்கள் கூடினர். மேலும் சிலையை உடைத்தவர்களை கண்டித்தும், அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதுபற்றி அறிந்ததும் மாகடி ரோடு போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விஷ்ணுவர்தன் உயிருடன் இருந்த போதும், அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சிகள் நடந்தன. தற்போது அவருடைய சிலை உடைக்கப்பட்டு உள்ளது. இந்த விஷம செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரி சோமண்ணா, உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது சிலையை உடைத்த மர்மநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படியும் போலீசார் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விஷ்ணுவர்தனின் ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே பெட்ரோல் விற்பனை நிலையம், விஜயநகர் மெட்ரோ ரெயில் நிலையம், பிரபல பல்பொருள் அங்காடியும் அமைந்து உள்ளது. அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாகடி ரோடு போலீஸ் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே விஷ்ணுவர்தனின் மருமகனும், நடிகருமான அனிருத்தா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

எனது மாமா விஷ்ணுவர்தனின் சிலையை மர்மநபர்கள் உடைத்தது கண்டிக்கத்தக்கது. உடைக்கப்பட்ட சிலையை உடனடியாக அதே இடத்தில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேறு இடத்தில் சிலையை வைப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். போராட்டம் நடத்தும் விஷ்ணுவர்தனின் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்று கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story