பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு இளம்பெண் பிணமாக கிடந்த சம்பவத்தில் மாமனாருக்கு வலைவீச்சு
பிளாஸ்டிக் பையில் பிணமாக கிடந்த இளம்பெண்ணின் அடையாளம் தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள மாமனாரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
மும்பை மலாடு அக்சா கடற்கரையோரமாக பிளாஸ்டிக் பையில் சுற்றி வைக்கப்பட்டு இருந்த பெண்ணின் உடல் சமீபத்தில் போலீசாரால் மீட்கப்பட்டது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அவர் காந்திவிலி பொய்சர் பகுதியை சேர்ந்த நந்தினி (வயது22) என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 11-ந் தேதி சம்ந்தா நகர் போலீசில் நந்தினி காணாமல் போய் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்து இருந்தனர். இது தொடர்பாக போலீசார் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் “கடந்த 3 ஆண்டுக்கு முன்பு நந்தினிக்கும் பொய்சரை சேர்ந்த பங்கஜ் ராய் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர் காந்திவிலியில் உலர்திராட்சை கடை வைத்து நடத்தி வருகிறார்.
வீட்டில் நந்தினியின் மாமனார் உணவு பொருட்கள் தயாரித்து கடைகளில் விற்று வருகிறார். கடந்த மாதம் நந்தினியின் கணவர் வேலை விஷயமாக சொந்த ஊருக்கு சென்றிருந்தார். வீட்டில் நந்தினி அவரது மாமனாருடன் வசித்து வந்தார். இதற்கிடையில் மாமனாரும் சொந்த ஊருக்கு சென்றதால் நந்தினியை தேடி பெற்றோர் அவரது வீட்டிற்கு வந்தனர்.
ஆனால் நந்தினி வீட்டில் இல்லாததால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். அப்போது மாமனாருடன் நந்தினி சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த நந்தினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்” என்பது தெரியவந்தது.
மாமனார் தலைமறைவாகி விட்டதால் நந்தினியை கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் அவரை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story