தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஷயத்தில் எந்த முரண்பாடும் இல்லை வானதிசீனிவாசன் பேட்டி


தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஷயத்தில் எந்த முரண்பாடும் இல்லை வானதிசீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 27 Dec 2020 7:51 AM IST (Updated: 27 Dec 2020 7:51 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஷயத்தில் எந்த முரண்பாடும் இல்லை என பா.ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதிசீனிவாசன் கூறினார்.

திருச்சி,

பா.ஜனதா கட்சியில் பெண்கள் உறுப்பினராக இணையும் விழா திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். கூட்ட முடிவில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களின் அரசியல் பெரும்பாலும் வாக்களிப்பதோடு நின்று விடுகிறது. அரசியல் களத்தில் பெண்களின் வாழ்க்கை முன்னேற யார்? காரணமாக இருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் நாங்கள் எடுத்துக் கூறி வருகிறோம். பீகார் தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருக்கிறார்கள். இதன் மூலம் பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறோம்.

முதல்-அமைச்சர் வேட்பாளர்

சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் தமிழக பெண்களிடம் மோடி எப்படி ஒரு ஹீரோவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறி வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்த விஷயத்தில் எந்த முரண்பாடும் கிடையாது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை வகிக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் அ.தி.மு.க. அவர்களுடைய கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து தான் அறிவித்துள்ளார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு

இதுவரை தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டம் நடத்தப்படவில்லை. முதலில் தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டத்தை கூட்டி அதன் வாயிலாக முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்று சொன்னால்தான் சரியாக இருக்கும். இந்த விவகாரத்தை பெரிய பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்போது, எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, கட்சி தலைமை எடுக்கும் முடிவு அடிப்படையில் தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதா? என்பது பற்றி தெரியும். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு தான் எங்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பது மாநில தலைமை தெரிவிக்கும். அரசியலில் எதுவும் நிரந்தரமான கூட்டணி என்று யாராலும் சொல்ல முடியாது.

பொய் பிரசாரம்

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் செய்த பொய் பிரசாரம் மக்களிடம் எடுபட்டது. பிறகு மக்கள் உண்மைகளை புரிந்து கொண்டு விட்டார்கள். தற்போது மத்திய அரசின் திட்டங்களில் இருந்து தமிழக மக்கள் பயன்பெற தொடங்கிவிட்டார்கள்.

வேளாண் சட்டம் குறித்து தமிழகத்தில் தி.மு.க. பொய் பிரசாரத்தை செய்து வருகிறார்கள். தங்களுடைய கட்சி தேர்தல் அறிக்கையில் இதே சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறிவிட்டு இப்போது அதை எதிர்க்கிறார்கள்.

விவசாயத்தில் முதலீடு

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். தி.மு.க. குடும்ப உறுப்பினர்கள் எத்தனை தொழிலில் முதலீடு செய்து கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் அவர்களுடைய முதலீடுகளை விவசாயத்துக்காக ஏன்? செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story