தாமரைக்குளம் நிரம்பாத நிலையில் தண்ணீர் திறக்க வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்-மறியல்


தாமரைக்குளம் நிரம்பாத நிலையில் தண்ணீர் திறக்க வந்த அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்-மறியல்
x
தினத்தந்தி 27 Dec 2020 4:41 PM IST (Updated: 27 Dec 2020 4:41 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே உள்ள தாமரைக்குளம் நிரம்பாத நிலையில் அதில் தண்ணீர் திறக்க வந்த அதிகாரிகளுடன், பொதுமக்கள் வாக்குவாதம் செய்து மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னிவாடி,

திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டையில் தாமரைக்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு ஆத்தூர் காமராஜர் அணையிலிருந்து தண்ணீர் வரும். மழைக்காலத்தில் இந்த குளம் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் குடகனாறு வழியாக வேடசந்தூர் செல்லும்.

இந்தவருடம் தாமரைக்குளம் இன்னும் நிரம்பவில்லை. இந்தநிலையில் அனுமந்தராயன்கோட்டையில் உள்ள வண்டிபாலம் என்ற இ்டத்தில் இருக்கும் தாமரைக்குளம் மதகை திறந்து குடகனாற்றுக்கு தண்ணீர் கொண்டு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அனுமந்தராயன்கோட்டை, பொன்னிமாந்துறை, குட்டத்துப்பட்டி, மயிலாப்பூர், ஆவரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நேற்று வண்டிபாலம் மதகு அருகே திரண்டனர். அப்போது அவர்கள் தாமரைக்குளத்தை நம்பி விவசாயம் செய்யும் நிலையில், அதில் இருந்து குடகனாற்றுக்கு தண்ணீர் கொண்டு சென்றால் தாமரைக்குளம் வற்றி போகும். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மதகை திறக்க கூடாது என வலியுறுத்தினார்கள்.

இந்தநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உதயகுமார், அழகேசன் மற்றும் அதிகாரிகள் வண்டி பாலத்துக்கு வந்து தாமரைக்குளம் மதகை திறக்க முயன்றனர். அப்போது மதகை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வண்டிபாலம் அருகே உள்ள பொன்னிமாந்துறை செல்லும் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா, பொன்னிமாந்துறை ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி மற்றும் ஊர் பிரமுகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள், இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும்படி கூறினர். ஆனால் அதை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து அதிகாரிகள் மதகை திறக்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். அதன்பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2½ மணி வரை நடந்தது. எனினும் தாமரைக்குளம் மதகு அருகே பொதுமக்கள் சார்பில் சிலர் காவல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story