பாலக்காடு அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை மனைவியின் தந்தை, மாமா வெறிச்செயல்


பாலக்காடு அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை மனைவியின் தந்தை, மாமா வெறிச்செயல்
x
தினத்தந்தி 27 Dec 2020 6:10 PM IST (Updated: 27 Dec 2020 6:10 PM IST)
t-max-icont-min-icon

பாலக்காடு அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் அவரது மனைவியின் தந்தை, மாமா ஈடுபட்டனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

பாலக்காடு,

பாலக்காடு மாவட்டம் தேன்குறிச்சி அருகே உள்ள எலமந்தம் பகுதியை சேர்ந்தவர் அனீஸ்(வயது 27). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஹரிதா(23) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் அவர்கள் 2 பேரும், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையில் அவர்களது காதல் பெற்றோருக்கு தெரியவந்தது. அதற்கு ஹரிதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அனீசும், ஹரிதாவும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் அனீசின் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் அனீஸ் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்தார். தனது வீட்டுக்கு வரும் வழியில் ஒரு கடைக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, குளிர்பானம் வாங்கி குடித்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு ஹரிதாவின் தந்தை பிரபுகுமார், மாமா சுரேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் அனீசை கண்டதும், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அரிவாள்களுடன் அருகில் வந்தனர். இதனால் பயந்துபோன அனீஸ், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை துரத்தி சென்று சரமாரியாக 2 பேரும் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அனீஸ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதையடுத்து படுகாயம் அடைந்த அனீசை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அனீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலக்காடு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அனீசை கொலை செய்த பிரபுகுமார், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காதல் திருமணம் செய்த வாலிபர், மனைவியின் தந்தை மற்றும் மாமாவால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story