2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க.வினர் 239 பேர் கைது


2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க.வினர் 239 பேர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2020 1:50 PM GMT (Updated: 27 Dec 2020 1:50 PM GMT)

கோவை, நீலகிரியில் தி.மு.க. சார்பில் தடையை மீறி மக்கள் கிராமசபை கூட்டம் நடத்தியதாக 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க.வினர் 239 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

அரசியல் கட்சிகள் கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு தடைவிதித்தது. இருந்தபோதிலும் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம் என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி கோவை சவுரிபாளையம் அருகே இந்திராநகரில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தடையை மீறி இந்த கூட்டம் நடத்தப்பட்டதால், பீளமேடு போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இதை அறிந்த தி.மு.க.வினர், தமிழக அரசு மற்றும் போலீசாரை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தடையை மீறி மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தியதாக நா.கார்த்திக் எம்.எல்.ஏ. மற்றும் 13 பெண்கள் உள்பட 108 பேரை போலீசார் கைதுசெய்தனர். கோவை கிழக்கு மாவட்டம் சூலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் மக்கள் கிராம சபைகூட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளை யம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள தனியார் இடத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய பொறுப்பாளர் சன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

இ்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி பேசும் போது, தி.மு.க.வின் கிராமசபை கூட்டம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே போலீசாரை வைத்து தடுக்கிறார்கள் என்றார். கூட்டத்தில் முன்னாள் அரசூர் ஊராட்சி தலைவர் ஏ.வி.அன்பரசு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் பொள்ளாச்சி அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற பெயரில் தி.மு.க. சார்பில் நேற்று மாலை 7 மணியளவில் மக்கள் கிராம சபை கூட்டம் தொடங்கியது. இதையொட்டி கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர். இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் கிராம சபை கூட்டம் நடந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதையும் மீறி தி.மு.க.வினர் கிராம சபை கூட்டம் நடத்தியதால் போலீசார் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கன்னிமுத்து ஆகியோர் உள்பட தி.மு.க.வினர் 73 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோல் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள மழவன் சேரம்பாடி மைதானத்தில் தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் சிவானந்தராஜா தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் திராவிடமணி எம்.எல்.ஏ., உள்பட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கிடையே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்தனர். இதனால அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தடையை மீறி கூட்டம் நடத்தியதாக திராவிடமணி எம்.எல்.ஏ. உள்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story