தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு
சமூக வலைதளங்களில் வலிமையான கருத்துக்களால் எதிரிகளை விரட்டி அடிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
கடலூர், .
கடலூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கடலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு செல்போன்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது
தகவல் தொழில்நுட்ப பிரிவு அ.தி.மு.க.வின் முதுகெலும்பாக உள்ளது. அ.தி.மு.க.வின் வலிமையை எடுத்து சொல்கிற ஒரு பிரிவு. அரசின் சாதனைகளை மக்களுக்கு உடனுக்குடன் எடுத்து செல்லும் அமைப்பாக உள்ளது. ஆக்கபூர்வமான பணிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு இயக்கம் வெற்றி பெற, வலிமை அடைய செய்ய பயன்படுத்த வேண்டும்.
கட்சியில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும் தனி பலம், பொறுப்பு உள்ள பிரிவாக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்படுகிறது. சமூக வலைதளம் என்னும் அறிவியல் வளர்ச்சியை நாம் முழுமையாக ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்தி கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் நம்முடைய கருத்தை வலிமையாக எடுத்து வைத்து எதிரியை விரட்டி அடிக்க வேண்டும். தேர்தல் வருதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ளன.
2021-ம் ஆண்டு நமது கட்சிக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைய போகிறது. இயக்கத்தை தாங்கி பிடிக்கக்கூடிய, உயர்த்தி பிடித்து மேம்படுத்தக்கூடிய சக்தி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு உள்ளது. ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும். தேர்தல் சாதாரண காலம் அல்ல. மிகப்பெரிய சவால். மிகப்பெரிய போட்டி உள்ளது. போட்டியில் நிற்க வேண்டும். துரிதமாக செயல்பட வேண்டும்.
ஆக்கபூர்வமான பணிகளை மக்களுக்கு படம் போட்டு காட்ட வேண்டும். எதிரி தூங்கும் போது விழிப்போடு இருக்க வேண்டும். எதிரிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, ஆதாரத்துடன் கையும், களவுமாக பிடிக்க வேண்டும். அந்த சக்தி உங்களுக்கு உள்ளது. கடலூர் மத்திய மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு உங்கள் பிரிவு தான் காரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், சார்பு அணி செயலாளர்கள் காசிநாதன், தங்கமணி, பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரித்வி, நகர பொருளாளர் எத்திராஜ், ஒன்றிய செயலாளர் பாஷியம், மாவட்ட பேரவை தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் கெமிக்கல் மாதவன், நகர துணை செயலாளர் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் கவுதம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story