பயிர்களில் நோய் தாக்குதல் தென்பட்டால் வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் கலெக்டர், விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
பயிர்களில் நோய் தாக்குதல் தென்பட்டால் வேளாண்மைத்துறை அலுவலர்களை விவசாயிகள் உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில், காணொலி காட்சி மூலமாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- கொரோனா தொற்று காரணமாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது விவசாயிகள் நலன் கருதி, முறையான பாதுகாப்புடன் காணொலி காட்சி மூலம் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் நுண்ணீர் பாசனம் அமைத்து குறைந்த நீரில் அதிக மகசூல் செய்து பயனடைய வேண்டும். விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்.
தற்போது நெல் போன்ற உணவு தானிய பயிர்கள் நிலை பயிர்களாக உள்ளது. இந்த பயிர்களில் ஏதேனும் நோய் தாக்குதல் தென்பட்டால், விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய பயிர்பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பயனடையலாம்.
வேளாண் எந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் மானிய விலையில் எந்திரங்கள் மற்றும் கருவிகள் பெறுவதற்கும், வேளாண் எந்திரங்கள் வாடகை மையங்கள் அமைக்க விரும்புபவர்கள் விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பதில் அளித்தனர்.
Related Tags :
Next Story