தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


வெண்ணெய் உருண்டைக்கல் அருகில் திரண்ட சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
x
வெண்ணெய் உருண்டைக்கல் அருகில் திரண்ட சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 28 Dec 2020 1:30 AM IST (Updated: 27 Dec 2020 11:22 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தொடர் விடுமுறை
கிறிஸ்துமஸ் பண்டிகை கடந்த வெள்ளிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாள் தொடர் விடுமுறையால் நேற்று மாமல்லபுரம் கடற்கரை மற்றும் புராதன சின்னங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர்.

இதனால் மாமல்லபுரம் கடற்கரை மற்றும் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட புராதன சின்ன மையங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

சென்னை புறநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றுப்புற புறநகர் பகுதிகளில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர்.

புராதன சின்னங்கள்
கொரோனா ஊரடங்குக்கு பிறகு நேற்று 30 ஆயிரம் பயணிகள் மாமல்லபுரம் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்ததாக சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் கண்டுகளித்த புராதன சின்னங்கள் முன்பு நேற்று வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்ததையும் காண முடிந்தது.

சுற்றுலா பயணிகளிடம் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் மாமல்லபுரம் நகரம் முழுவதும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள்
சுற்றுலா வாகனங்கள் நேற்று அதிகமாக திரண்டதால் நகரப்பகுதியில் நெரிசல் மிகுந்த இடங்களில் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி தலைமையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

குறிப்பாக நேற்று புராதன சின்னங்களை கண்டுகளிக்க தினமும் வழங்கப்படும் 2 ஆயிரம் ஆன்லைன் நுழைவு சீட்டுகள் காலை 10 மணிக்கே அனைத்தும் பதிவாகிவிட்டதால் கட்டண கவுண்ட்டர்களில் ரூ.40 கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு வாங்கி சென்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை பகுதிகளில் அனைத்து கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.

Next Story