பெரியபாளையம் அருகே பரபரப்பு; தி.மு.க. பிரமுகரை கொலை செய்ய முயற்சி; 4 பேர் கொண்ட மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
காரில் வந்த தி.மு.க.பிரமுகரை 4 பேரை கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து பட்டாகத்தியால் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டது.
ரியஸ் எஸ்டேட் அதிபர்
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 46). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தி.மு.க. பிரமுகராகவும் இருந்து வருகிறார். இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், சோழவரம் ஒன்றிய துணைத் தலைவருமான கருணாகரனின் சகோதரரும் ஆவார். கண்ணன் பெரியபாளையம் அருகே திருநிலை கிராமத்திற்கு ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக காரில் வந்தார். அப்போது காரில் அவருடன் விக்னேஷ், டிரைவர் மணி உள்பட 2 பேர் இருந்தனர்.
இந்நிலையில், பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் கன்னிகைபேர் ஏரிக்கரை அருகே கார் வந்தபோது, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் திடீரென காரை வழிமறித்து கார் மீது பட்டாக்கத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.
மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் காரில் வந்த கண்ணன், விக்னேஷ், டிரைவர் மணி ஆகியோர் அச்சமடைந்து உயிரை காப்பற்றி கொள்ள காரிலிருந்து இறங்கி தப்பி ஓடினர். ஆனால் இவர்களை விடாமல் மர்ம நபர்கள் சுமார் அரை கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்றனர். அப்போது அங்கிருந்த தனியார் நிறுவனத்திலிருந்து வெளியே வந்த 50 பேர் கொண்ட தொழிலாளிகளிடம் மூவரும் தஞ்சமடைந்தனர்.
இதனால் அந்த கும்பல் செய்வதறியாது திகைத்து நின்று, கொலை செய்யும் திட்டத்தை கைவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக கண்ணன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை சேர்ந்த 4 பேர் யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வலைவீசி வருகின்றனர்.இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story