கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு; கிராம பஞ்சாயத்து தேர்தல் அமைதியாக நடந்தது; 30-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை


பீதர் மாவட்டம் அவுராத் தாலுகாவில் ஒரு கிராமத்தில் வாக்களிக்க ஆண்கள், பெண்கள் தனித்தனி வரிசையில்
x
பீதர் மாவட்டம் அவுராத் தாலுகாவில் ஒரு கிராமத்தில் வாக்களிக்க ஆண்கள், பெண்கள் தனித்தனி வரிசையில்
தினத்தந்தி 28 Dec 2020 4:20 AM IST (Updated: 28 Dec 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

கிராம பஞ்சாயத்து தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 2-வது கட்ட தேர்தலில் விறுவிறுப்பான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

வாக்குச்சாவடிகள்
கர்நாடகத்தில் மொத்தம் 5,728 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த கிராம பஞ்சாயத்துகளுக்கு 2 கட்டமாக 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கிராம பஞ்சாயத்துகளுக்கு முதல் கட்டமாக கடந்த 22-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 3,019 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இதில் சுமார் 90 சதவீத வாக்குகள் பதிவாயின.

இந்த நிலையில் 2,709 கிராம பஞ்சாயத்துகளுக்கு 2-வது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 43 ஆயிரத்து 291 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 3,697 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதுபோக, மீதமுள்ள 39 ஆயிரத்து 378 பதவிகளுக்கு 1 லட்சத்து 5 ஆயிரத்து 431 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதையொட்டி 109 தாலுகாக்களில் 20 ஆயிரத்து 728 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கடும் வாக்குவாதம்
இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வயதானவர்கள், இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். ஆனேக்கல், பாகல்கோட்டை, சிவமொக்கா, சாம்ராஜ்நகர், ஹனூர் வாக்குச்சாவடிகளில் வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் ஓட்டுப்பதிவை நிறுத்தினர். பிறகு நிலைமை சரியான பிறகு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

கே.ஆர்.புரம், அக்ரஹார பிதரஹள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளின் அருகே 2 கோஷ்டிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. அங்கு இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கும்பலை விரட்டியடித்தனர். கதக் மாவட்டம் ரோனா தாலுகா மெனசகி கிராம வாக்குச்சாவடி அருகே காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்களிடையே வன்முறை நடந்தது. இதனால் அங்கு ஓட்டுப்பதிவை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தினர். அதன் பிறகு போலீசார் அங்கு வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அங்கு மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

தேர்தலை புறக்கணித்தனர்
பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகா கதம்புரா கிராம பஞ்சாயத்தில், வாக்குச்சீட்டில் சின்னம் மாறுபட்டு இருந்ததால் குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. வேலை வாய்ப்பு வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் வருணா தொகுதியில் உள்ள இம்மாவு கிராமத்தினர் தேர்தலை புறக்கணித்தனர். வேட்பாளர்கள் மற்றும் ஊர்பிரமுகர்கள் அந்த வாக்காளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதை ஏற்று அந்த கிராமத்தினர் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்தனர்.

பெங்களூரு நகர மாவட்ட ஆனேக்கல் தாலுகா முத்தானல்லூர் அருகே சிக்கதிம்மசந்திரா கிராமத்தினரின் வாக்குகள் வேறு வாக்குச்சாவடிகளுக்கு மாற்றப்பட்டு இருந்தது. இதனால் அந்த கிராமத்தினர், வாக்களிக்க மாட்டோம் என்று அறிவித்தனர். அவர்களை ஊர்பிரமுகர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சமாதானப்படுத்தி தேர்தலில் பங்கேற்க வைத்தனர். ஹனூரை சேர்ந்த வாக்காளர்கள், தங்கள் கிராமத்தை சேர்ந்த ஹலகதம்படி (வயது65) என்பவர் யானை தாக்கி இறந்ததாகவும், அவரது குடும்பத்தினருக்கு அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என்றும், அதனால் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர்.

திருவிழாவை போல்...
பொதுமக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். காலையில் கடும் பனிமூட்டத்தையும் பொருட்படுத்தாமல், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர். வெளியூர்களில் தொழில் நிமித்தமாக இருந்தவர்களும் சொந்த ஊருக்கு திரும்பி வாக்களித்தனர். இதனால் கிராமங்கள் திருவிழாவை போல் களைகட்டி இருந்தன. கொரோனா பரவலை தடுக்க வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. அனைத்து வாக்காளர்களும் முகக்கவசம் அணிந்து வந்தனர். வரிசையில் சமூக இடைவெளி விடப்பட்டு இருந்தது.

பெங்களூரு புறநகர், ராமநகர், சித்ரதுர்கா, தாவணகெரே, கோலார், சிக்பள்ளாப்பூர், சிவமொக்கா, துமகூரு, மைசூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, குடகு, ஹாசன், மண்டியா, சாம்ராஜ்நகர், பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை, தார்வார், ஹாவேரி, உத்தரகன்னடா, கலபுரகி, பீதர், பல்லாரி, ராய்ச்சூர், யாதகிரி, கொப்பல் ஆகிய மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து தேர்தல் எந்த பிரச்சினையும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தத்தில் 2-வது கட்ட கிராம பஞ்சாயத்து தேர்தலும் சிறு சிறு சம்பவங்களை தவிர அமைதியாக நடந்து முடிந்தது. 1 லட்சத்து 24 ஆயிரத்து 368 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஓட்டு எண்ணிக்கை
இந்த தேர்தலில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2 கட்ட தேர்தலும் முடிவடைந்த நிலையில் வருகிற 30-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்றைய தினம் இரவுக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பீதிக்கு இடையே கிராம பஞ்சாயத்து தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தேர்தலில் மாநிலம் முழுவதும் 81 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் 122 கொரோனா நோயாளிகள் ஓட்டுப்போட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story